தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பெறும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இனி தமிழக அரசியல் களம், விஜய் வெர்சஸ் உதய் என்று மாறியுள்ளது.
எதிர்க் கட்சியாகும் திமுக
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் தவெக 107 தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், திமுக 55 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 44 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. இதனால் திமுகவே எதிர்க் கட்சியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுகவின் தலைவராக உள்ள ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இதனால் அவரால் சட்டப்பேரவைக்குச் செல்ல முடியாத நிலை உருவாக்கி உள்ளது. இதற்கிடையே ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
உதயின் முதல் ஹீரோ விஜய்
இதனால் உதயநிதி எதிர்க் கட்சித் தலைவர் ஆகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் முதன்முதலில் 2008ஆம் ஆண்டு படத்தைத் தயாரித்துத்தான் சினிமாத் துறையில் நுழைந்தார். அந்தப் படம் விஜய்- த்ரிஷா இணைந்து நடித்த ’குருவி’.
தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தாலும் நடிகராகவும் முத்திரை பதித்தார் உதயநிதி. பின்னர் அரசியலில் நுழைந்து துணை முதலமைச்சர் பதவி வகித்தார். தற்போது சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆளுமையை நிரூபித்த விஜய்
இதற்கிடையே தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 100-க்கும் மேற்பட்ட இடங்களைத் தனித்துக் கைப்பற்றி உள்ளார் தவெக தலைவர் விஜய். திரைத்துறையின் உச்ச நடிகராக இருந்தபோதும் அதைவிடுத்து, தமிழக அரசியல் களத்தைத் தேர்ந்தெடுத்தார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தன்னுடைய ஆளுமையை நிரூபித்துள்ளார் விஜய்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் முதல் படத்தில் ஹீரோவாக இருந்த விஜய், இப்போது அவருக்கே முதன்மை வில்லனாக மாறி உள்ளார்.
இனி விஜய் வெர்சஸ் உதய்தான்
முன்னதாக தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை மட்டுமே விமர்சித்து வந்தார். விஜய் பற்றி அதிகம் விமர்சிக்காத நிலையில், இனி சட்டப் பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் விஜய் வெர்சஸ் உதய் என்றுதான் களம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
