விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டும் அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் "தளபதி" விஜயின் உத்தரவின் படி “தளபதி விஜய் மக்கள் இயக்கம்"(Vijay Makkal Iyakkam) எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.
எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைகளும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, "தளபதி" மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை , மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் கடந்த 4 ஆம் தேதியோடு நிறைவு பெற்ற நிலையில், 7 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கடந்த ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக 169 இடங்களில் போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் வெற்ற பெற்ற 129 பேரை விஜய் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த முறையும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்தார். இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்