சேலம் மாநகராட்சியை கைப்பற்றும் மேயர் முதல் வேலையாக திருமணிமுத்தாற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருமணிமுத்தாறு சேர்வராயன் மலையில், மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி, இரு துணைநதிகளை கொண்டிருந்தது. திரு என்றால் தங்கம், மணி என்றால் நவரத்தினங்கள் மற்றும் முத்து. இந்த மூன்று வகையான பொருட்களும் இந்த புண்ணிய நதியில் இருந்து கிடைத்ததாக மக்களின் நம்பிக்கை. சேலத்தில் உற்பத்தியாகி சுமார் 120 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு கரூர் அருகே நன்செய் இடையார் என்னும் இடத்தில் திருமணிமுத்தாறு காவிரியில் கலக்கிறது. மேலும் திருமணிமுத்தாற்றின் கரையில் பஞ்ச பூதங்களை வலியுறுத்தும் விதமாக ஐந்து புண்ணியத்தலங்கள் உள்ளன. இப்படிப்பட்ட வரலாற்று பின்னணியை கொண்ட இந்த ஆறு ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்து, குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆற்றில் அசுத்தம் செய்பவர்கள் மீது அப்பொழுதே ஆங்கிலேயர்கள் அபராதம் விதித்து நல்லமுறையில் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் சேலம் மாநகர் பகுதிகளில் மட்டும் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு திருமணிமுத்தாறு பயணிக்கிறது. மாநகரில் உள்ள அதிகளவிலான சாயப்பட்டறைகள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் ஆகியவை திருமணிமுத்தாற்றில் கலப்பதால் முழுவதுமாக அசுத்தமாகி, தனது பொலிவை இழந்து திருமணிமுத்தாறு காட்சியளிக்கிறது. குறிப்பாக மாநகரப் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரிடையாக திருமணிமுத்தாறு திறந்துவிடுவதால் தண்ணீரில் சாயக்கழிவுயின் ரசாயன தன்மை அதிகளவில் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கழிவுநீரை நேரடியாக திருமணிமுத்தாறு ஆற்றில் திறந்து விடுவதால் முழுவதுமாக மாசடைந்து சாக்கடை கால்வாய் ஆகவே மாறியுள்ளது.
சேலம் சீர்மிகு திட்டத்தின் கீழ் திருமணிமுத்தாற்றின் கரைகளும் குப்பைகள் கொட்டாதவாறு இருக்க தடுப்பு வேலிகள் ஏற்படுத்தினாலும், அதனை மீறியும் ஏராளமானோர் மாசுபடுத்தி வருகின்றனர். இந்த தண்ணீரில் 4 ஆயிரம் டி.டி.எஸ் அளவிற்கு உப்புத் தன்மை இருப்பதால் சேலம் மாநகர சுற்றுவட்டார பகுதியில் தண்ணீரை சுத்திகரிக்க முடியாத சூழல் உள்ளது.
தற்போது சாயக் கழிவுகளில் ரசாயன தன்மை திருமணிமுத்தாற்றை சுற்றியுள்ள ஏரி, குளம், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்திலும் ரசாயன கலந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு மாசடைந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணிமுத்தாறு ஆற்றில் கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை தண்ணீர் கலப்பதை தடுத்து அடுத்த தலைமுறைக்கு திருமணிமுத்தாவிட்டு செல்ல வேண்டும் என்றும் சேலம் மாவட்ட மக்கள் ஒருமித்த கருத்தாக கூறிவருகின்றனர். அதேபோன்று, எங்களுக்கு வாக்களித்தால் திருமணிமுத்தாறு மிக விரைவில் சீர்ப்படுத்தி தரப்படும் என பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் பொதுமக்களிடம் உறுதி அளித்து வருகின்றனர்.