10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் நிலை குலைந்து போயிருந்த பாரத நாட்டை மோடி காப்பாற்றி இருக்கிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். 

 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.



 

பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்ட நிர்மலா சீதாராமன் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “மக்களுக்கு முன்னால் வாக்குறுதி கொடுப்பதற்கு தைரியம் வேண்டும். பிரதமர் மோடி 10 ஆண்டு பிரதமராக இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். அதுபோல் குஜராத் மாநிலத்திலும் முதலமைச்சராக இருந்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். பெண் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். நமது ஆதரவை படித்த பட்டதாரி பெண் வேட்பாளருக்கு கொடுக்க வேண்டும்.

 

சிதம்பரத்திற்கும் சரி தமிழ்நாட்டிற்கும் சரி 10 ஆண்டுகளாக பல திட்டங்களை கொண்டு வந்தார் மோடி. அரிசி இல்லை என்ற கவலைக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக மோடி பாடுபட்டார். நெல், எள், சோளம், வேர்க்கடலை சோளத்திற்கு அதிக விலை வழங்கப்பட்டு உள்ளது.

 

சோளத்திற்கு குவிண்டால் 1310 ரூபாயிலிருந்து 2090 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வேர்க்கடல் ஒரு குவிண்டால் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 6377 உயர்த்தப்பட்டு இருக்கிறது. எள் 4600 ரூபாயிலிருந்து 8635 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. பருத்திக்கான விலை குவிண்டால் 3800 லிருந்து 6080 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. நெல் 1310 லிருந்து 2183 ஆக உயர்த்தப்பட்டது. 2023 வரை ஒரு கோடியே 22 லட்சம் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய கொடுத்திருக்கிறார்கள். 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாக சென்று இருக்கிறது. இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

 

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டது. அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. 60 கிலோ மீட்டர் தூரமுள்ள கல்லகம் - மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 1025 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதுச்சத்திரம் ரயில் நிலையம் அரியலூர், சிதம்பரம் போன்ற ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் மூலம் புதுப்பிக்க திட்டம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளைப் போல மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு  வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய உதவி செய்யப்படும்.



 

முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு முந்திரி ஏற்றுமதியை செய்வது சுலபம். அதற்கான திட்டம் தீட்டப்படும். முந்தைய எம்பிக்கள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யவில்லை. பிரசித்தி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரசு எடுத்துக் கொண்டு பிறகு பல்கலைக்கழகமும், மருத்துவக் கல்லூரியும் இருக்கும் நிலையை பார்த்து மனது வேதனைப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் நிலைமை கஷ்டமாக இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை எப்படி முன்னுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும்.

 

திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 வருடம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு நல்லது எதையும் செய்யவில்லை. அவர்கள் ஊழலுக்கு பெயர் போனவர்கள் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைகற்றை ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள். அந்த 10 ஆண்டு கால ஆட்சியால் பாரத நாடு நிலை குலைந்து போய்விட்டது. கீழிருந்து ஐந்தாவது நிலைக்கு சென்ற பாரதத்தை, பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் காப்பாற்றி இருக்கிறார். இன்றைக்கு மேலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்து விட்டது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.

 

மக்கள் மீது வரியை சுமத்தாமல் ஊழலை எதிர்த்து ஆளுமையாக இருந்து ஆட்சி செய்தார் மோடி. தொழில்நுட்பம் மூலம் உலகத்திற்கே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 கம்பெனி இருந்தால் அதில் 50 கம்பெனிகள் பாரத நாட்டில் இருக்கின்றன. ஆனால் இந்த கம்பெனிகள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு, மோடி திரும்பி போ என்பதில் தீவிரமாக இருந்தனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பு எக்ஸ்போ சென்னையில் நடத்திய பெருமை மோடியைச் சேரும். அதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி பொருள்களை செய்து விற்பனை செய்கிறார்கள். இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்தபோது கருப்பு கொடியும், கருப்பு பலூனையும் காண்பித்து திரும்பி போ என்று கூறினார்கள்.

 

உலக அளவில் இளைஞர்கள் செய்யக்கூடிய வேலையை நமது இளைஞர்கள் சென்னையில் செய்யும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தாய்மார்களே கொஞ்சம் உட்காருங்கள். சிறிது நேரத்தில் பேசி முடித்து விடுகிறேன். மக்கள் பணிகளை செய்ய நேரமில்லை. ஆனால் போதைப் பொருள்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் வசப்படுத்துகிறது. திமுக ஆதரவோடு இவை செய்யப்படுகிறது. இந்தத் தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப் பொருட்களைக் கொண்டு வரும் ஒவ்வொருவரும் அழிந்து சாவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்கணும் என்று யோசித்து வையுங்கள். 

 

வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்கிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்? மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள்” எனப் பேசினார்.