நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சுந்தராபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது “எல்லோரும் ஊசி போட்டீர்களா?” எனக்கேட்டு பேச்சை துவங்கிய அவர், ”இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலே போதுமானது” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது. ஆனால் கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன். வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என சொல்றீங்க, செஞ்சீங்களா?
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதும், கோவை மாவட்ட மக்கள் ஏமாத்திட்டீங்க. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார். அதிமுக ஆட்சி வீட்டில் மக்களை முடக்கியது தான் அவர்களின் சாதனை. ஆனால் உயிரிழப்புகளை தடுக்க 7 கோடி தடுப்பூசிகளை போட்டது திமுக தான். அதிமுக ஒரு கோடி தடுப்பூசி தான் போட்டார்கள். இது போன்ற திட்டங்களால் தான் தனியார் நாளிதழ் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவின் நம்பர் ஒன் சி.எம் ஸ்டாலின் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி முடிந்து செல்லும் போது கஜானாவில் 6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர். ஆனாலும் திமுக ஆட்சியமைந்தவுடன் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு, என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்.
தமிழகத்தில் ஒரு போதும் பாஜக காலூன்ற முடியாது என ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விட்டுள்ளார். இதற்கு காரணம் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் விளங்குகிறார். இந்த முறை நம்பலாமா? ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 110 கோடி ரூபாயை முடக்கியுள்ளோம். வெள்ளலூர் குப்பைக் கிடங்கு இடம் மாற்றப்படும். 27 அமாவாசை தான் திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள 2 அமாவாசைகள் யார் என்பது உங்களுக்கு தெரியும். இருவரையும் அனுப்பிவிட்டீர்கள், ஆனால் ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்