Tripura Election: திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 16, 2023ல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 அன்று நடைபெறும். அந்த தினத்தில் தான் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு மானிக் சஹா முதல்வராக உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 43.59% வாக்குகளை பெற்றது. அதேபோல், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 36 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் எதிர்கட்சியாக உள்ள் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 42.22% வாக்கு பெற்றிருந்தாலும், கைப்பற்றிய தொகுதிகள் 14 மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
மொத்தம் 259 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர், அவர்களில் 20 பேர் பெண்கள். பாஜக 55 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது, அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஆறு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 47 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் போட்டியிடுகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மற்றும் 58 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஆளும் பாஜக 12 பெண் வேட்பாளர்களுடன் அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. திப்ரா மோதா 42 இடங்களில் போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரிபுரா சட்டபேரவையில் 60 இடங்கள் உள்ளன. இதில் வாக்களிக்க மொத்தம் 3,328 வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 1,100 வாக்குச் சாவடிகள் கவனிக்கத்தக்கவை என்றும் மற்றும் 28 வாக்குச் சாவடிகள் முக்கியமானவை மற்றும் பதற்றம் நிறைந்தவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
காலை 9 மணி நிலவரப்படி 13.69 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன் பின்னர் தற்போது 11 மணி நிலவரப்படி 32.31 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.