Tripura Election 2023:  திரிபுராவில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 31.23% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  


திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 16, 2023ல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.  அதன்படி இன்று (பிப்ரவரி, 16) காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும், மார்ச் 2ஆம் தேதி தான் நாகலாந்து  மற்றும் மேகாலயா மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


திரிபுரா ஒரு பார்வை


இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று  மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திரிபுராவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திரிபுராவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் மாற்றி அமைத்தது. அதில் பெற்ற வெற்றி மூலம் பாஜக முதல் முறையாக திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லாமல் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


2018ல் நடந்த பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பு வரை, திரிபுரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்ததில்லை என்பது தான் வரலாறு. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.