அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திருச்சி மாவட்ட உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
‛‛அதிமுக வேட்பாளர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றால் தான் திருச்சி மேயராக வர முடியும். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார். இதற்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. தமிழகத்தில் அதிக ஆண்டு ஆட்சி செய்த கட்சி அதிமுக. ஸ்டாலின் அவர்களே உங்களின் ,மிரட்டலுக்கும் ,உருட்டலுக்கும் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.
திமுக கொல்லைப்புறம் வழியாக வருகின்ற தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக வேட்பாளர்களை அச்சுறுத்துவது, வழக்குகளை பதிவு செய்வது போன்ற செயல்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாத காலங்களில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மக்களிடையே திராவிட முன்னேற்றக் கழகம் செய்யும் தில்லு முல்லுகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
கூட்டணி கட்சி துணையில்லாமல் தேர்தலில் தனித்து நிற்கத் திராணி இல்லாத கட்சி திமுக. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சின்னம் உள்ளது. ஆனால் சிலர் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இது வெட்கம், அவமானம்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு செயலில் ஈடுபடுவோர்களுக்கு துணையாக இருக்கிறது திமுக.
அதிமுக சட்டரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்போம். காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. ஆட்சி மாறும் காட்சிகள் மாறும் ஒரு காலத்தில்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சட்டப்படி செயல்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறை சட்டபடி நேர்மையாக நடக்க வேண்டும், இல்லையென்றால் வரும் காலத்தில் பதில் சொல்லும் காலம் வரும்.
நம்பிக்கை துரோகம் செய்வது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புதிதல்ல. 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக மக்களுக்கு எந்த திட்டத்தை செயல்படத்த வில்லை என திமுக பொய் கூறி வருகிறது. பொய் சொல்லுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது திமுக விற்கு தான் தர வேண்டும். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எதையும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் டெக்னிக்கா மக்களை ஏமாற்றுகிறது. நீட் தேர்வை சொல்லியே திமுக 5 ஆண்டு காலத்தை கடந்தார்கள். நீட் தொடர்பான விவாதத்திற்கு வர தயார். நீட் என்ற வாரத்தையை தமிழகத்திற்கு வந்ததற்கு காரணம் திமுக தான். நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தயார். வருகின்ற நகர்புற தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.
அதிமுக வேட்பாளர்களை மக்கள் அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுக சேர்ந்தவர்கள் தான் வர வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நமுக்குள் இருக்கும் சிறு சிறு மன கசப்புகளை அகற்றி விட்டு செயல்பட வேண்டும்,’’ என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்