தமிழ்நாட்டின் மையப் பகுதியாக திகழ்வது திருச்சி என்று சொன்னால் அது மிகையாகாது.  தமிழ்நாடு அரசியலை பொறுத்தவரை அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் வரை திருச்சி என்றாலே திருப்பு முனையாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். 


குறிப்பாக அரசியல் கட்சி ரீதியாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றாலும், அனைத்து அரசியல் கட்சியினரும் முதலில் தேர்வு செய்வது திருச்சி தான். ஏனென்றால் திருச்சி என்றாலே திருப்புமுனையை உருவாக்கித் தரும் என்று அனைவரும் மனதில் ஆணித்தனமான நம்பிக்கையாக உள்ளது.


அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் முயற்சி செய்தனர். 


இந்நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் உள்ள  மதிமுக சார்பாக துரை வைகோ, அதிமுக சார்பாக கருப்பையா, அமமுக சார்பாக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பாக ராஜேஷ், ஆகியோர்  போட்டியிட்டனர். 




மதிமுக வேட்பாளர் துரை வைகோ தேர்தல் பிரச்சாரம்  


திருச்சி மக்களவை தொகுதியை திமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் திமுக தலைமை சில காரணங்களால் தனது கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்தது. இதனால் திருச்சி திமுக நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. 


ஆனாலும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் கழகத்தின் நிர்வாகிகளை அரவனைத்து, தலைமையின் முடிவை ஏற்று கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கூறினார்கள். 


இந்நிலையில், கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைத்து, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் துரை வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். இந்த நிகழ்வில் திடீரென்று ஆதங்கப்பட்ட துரை வைகோ,  செத்தாலும் தனி சின்னத்தில் தான் நிற்பேன், எனக்கு அரசியல் முக்கியமில்லை, என் தந்தைக்காகவும், கட்சியை வளர்ப்பதற்காகவும் மட்டுமே அரசியல் இருக்கு வந்தேன் என்றார். 


அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ், ரகுபதி மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மத்தியில் துரை வைகோ பேசியது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. 




தேர்தல் பிரச்சாரத்தில் துரை வைகோ சந்தித்த சிக்கல்கள்


இதனால் துரை வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் திமுக பகுதி, வட்டகழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.


தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் கூட  வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழும்பியது. இதனால் அமைச்சர் நேரு மற்றும் அன்பில் மகேஷ் இறுதி வாரத்தில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


குறிப்பாக துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன், தனிச் சின்னத்தில் தான் போட்டிடுவேன் என்று பேசியது திமுகவினர் இடையே பெரும் கோபத்தையும், வருத்தையும் ஏற்படுத்தியது. இதனால், துரை வைகோ பிரச்சாரம் செய்யும் போது நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் மதிமுக வட்டாரங்களில் கேள்வியாக எழுந்தது.


திமுகவினருக்கு வருத்தம் இருந்தாலும், திருச்சியில் கூட்டணி கட்சி வேட்பாளர் தோற்றால் அது அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர்களுக்கு மட்டும் அவமானம் இல்லை, திமுகவிற்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று நிர்வாகிகள் எண்ணினார்கள். இந்நிலையில் திமுக தலைமையின் அறிவுறுத்தின்படி இந்த தேர்தலில் பணியாற்றி உள்ளோம், நிச்சயமாக துரை வைகோ வெற்றி பெறுவார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.




திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்..


தமிழ்நாட்டில் மக்களை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. திருச்சி தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும் 239 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர்.


இதில் 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும் , 102 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்தனர். 


ஆண் வாக்காளர்கள் 67.66 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.39 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42.68 சதவீதமும் என மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளது.


இதனை தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தையும் போலீஸ் பாதுக்காப்புடன் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் வைக்கபட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுக்காப்பு போடபட்டு இருந்தது. 




திருச்சி எம்பியாக  துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.  


இதனை தொடர்ந்து ஜுன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே திமுக கூட்டணி கட்சி மதிமுக  வேட்பாளர் துரை வைகோ அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தபால் வாக்குகள், வாக்குபதிவு இயந்திரம் எண்ணிக்கை என மொத்தம் 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


மதிமுக வேட்பாளர் துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3,13,094 வாக்குகள் அதிகம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.