திருச்சி என்றாலே திருப்புமுனை தான் என்று அரசியல் கட்சியினர் பலர் கூறுவதை கேட்கலாம். அதற்கு இங்கு நடத்தப்பட்ட மாநாடுகளும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும் தான் முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் மையமாக திருச்சி காணப்படுகிறது. எனவே எந்த ஒரு முக்கிய நகரத்தில் இருந்தும் கட்சியினர் 6 மணி நேரத்தில் வந்து சேர முடியும். திருச்சியில் மாநாடு நடத்த இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. வழக்கமாக திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் தான் மாநாடுகள் நடத்தப்படும். இங்கு மாநாடு நடத்தி திருப்புமுனை கண்ட அரசியல் ஆளுமைகளாக அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் வரை பலரும் இருக்கின்றனர்.
திமுகவிற்கு திருச்சி ஏன் திருப்பு முனையாக மாறியது..
1949ல் திராவிட முன்னேற்ற கழக தொடங்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த அறிஞர் அண்ணா முடிவு செய்தார். அப்போதெல்லாம் ஒரே நாளில் மாநாடு நடத்தப்படாது. 3 அல்லது 4 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் 1956ஆம் ஆண்டு மே 17 முதல் 20ஆம் தேதி வரை திமுக மாநில மாநாடு நடைபெற்றது. தேர்தலில் திமுக போட்டியிடலாமா? வேண்டாமா? என இந்த மாநாட்டில் தான் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு, 56,942 பேர் ஆதரவாகவும், 4,203 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து 1957ல் தேர்தல் அரசியலில் திமுக இறங்கியது. அப்போது தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால் திமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு 13 இடங்களில் வென்றனர். பின்னர் 1962ல் 50 இடங்களில் வெற்றி பெற்றனர். 1967ல் 137 இடங்களில் அமோக வெற்றி முதல்முறை திமுக ஆட்சி அமைத்தது. இதற்கு திருச்சி மாநாடு தான் அடித்தளம் என்பதை மறுக்க முடியாது என்று திமுகவின் முக்கிய தலைவர்கள் கூறுவார்கள். இதனை தொடர்ந்து அண்ணா மறைவிற்கு பின்னர் 1970ஆம் ஆண்டு திருச்சியில் கருணாநிதி தலைமையில் மாநில மாநாடு நடைபெற்றது. இதையடுத்து 1971ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 184 இடங்களில் திமுக அபார வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
1990ஆம் ஆண்டு திருப்புமுனை மாநாடு என்ற பெயரில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் திமுக மாநாடு நடைபெற்றது. ஆனால் அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது. 1995ல் கருணாநிதி தலைமையில் திருச்சியில் மாநாடு நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு 173 இடங்களை பிடித்தது. இதன்மூலம் 12 ஆண்டுகால எம்.ஜி.ஆர் ஆட்சியை தொடர்ந்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினர், திருச்சியை மையமாக வைத்து தங்களது தேர்தல் பிரச்சாரத்தை சென்டிமெண்டாக தொடங்கினர். இதனை தொடர்ந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.
அதிமுகவிற்கு திருச்சி ஏன் திருப்புமுனையாக மாறியது...
அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் தனது கட்சியின் முதல் மாநில மாநாடு, முதல் பொதுக்குழு, தேர்தல் நிதி திரட்டும் கூட்டம், முதல் பொதுக்கூட்டம் ஆகியவற்றை திருச்சியில் தான் நடத்தினார். 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் காட்டூரில் முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதையடுத்து 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 130 இடங்களில் அமோக வெற்றி பெற்று முதல்முறை அதிமுக ஆட்சியை பிடித்தது. எம்.ஜி.ஆர் முதல்வரானார். அப்படியே தொடர்ந்து மூன்று முறை (1977, 1980, 1984) ஆட்சிக் கட்டிலில் இருந்தார்.
இதேபோல் 2001ல் திருச்சி ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தில் ஜெயலலிதா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இதையடுத்து நடந்த தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து 2016 சட்டமன்ற தேர்தலின் போது சென்டிமென்ட்டாக திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.