தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியிட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தைப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு இம்மாதம் 19 ஆம் தேதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் ஆண் மேயராக வாய்ப்பு கிடைத்ததால் திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் திமுக சார்பாக 51 இடங்களில் வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதேபோல் எப்படியாவது மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்று அதிமுக 64 வார்டுகளில் போட்டியிட்டது.இதனால் திருச்சி மாநகராட்சி தேர்தல் பரபரப்புக்கு சிறிதளவு கூட பஞ்சம் இல்லாமல் தொடங்கியது.
தமிழ்நாட்டின் மையப் பகுதியாக உள்ள திருச்சிராப்பள்ளி 'மலைக்கோட்டை மாநகரம்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த, 1866ம் ஆண்டு ஜூலை, 8ம் தேதி திருச்சி நகராட்சியானது. இதையடுத்து 128 ஆண்டுகளுக்கு பிறகு, 1994ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் கடந்த 28 ஆண்டுகளாக மேயர் பதவி பெண்களுக்கு என தொடர்ந்து ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக கூட்டணியில் தமாகா, காங்கிரஸுக்கு அந்த பதவி ஒதுக்கப்பட்டது. முதல் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி, அவரைத் தொடர்ந்து, எமிலி ரிச்சர்ட், சாருபாலா தொண்டைமான், சுஜாதா ஆகியோர் மேயராக இருந்தனர். கடந்த முறை திருச்சி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றியது. அக்கட்சியின் ஜெயா என்பவர் மேயராகினார். திருச்சி மாநகராட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த மேயர் பதவியை பிடிக்க, திமுக, அதிமுக கட்சிகளில் பலத்த போட்டி நிலவியது. மாநகராட்சி கவுன்சிலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, மறைமுகத் தேர்தல் மூலம்தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகையால் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், இவருக்குத்தான் வாய்ப்பு என்று கட்சியினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மேயர் பதவியை பொது பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம், மாநகராட்சி ஆகி 28 ஆண்டுகளுக்கு பிறகு, ஆண் ஒருவர் திருச்சி மாநகரத்தில் மேயர் ஆகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேயர் பதவிக்கு திமுக கட்சியின் மாநகரச் செயலாளர், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டைப் பகுதிச் செயலாளர் மதிவாணன் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு என கூறப்பட்ட நிலையில் , திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சருமான கே.என்.நேருவின் ஆதரவு அன்பழகனுக்கு தான் என்றனர். குறிப்பாக திருச்சியில் நேருவின் நிழலாக இருப்பவர் தான் அன்பழகன் என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் துணை மேயர் அன்பழகனுக்கு மேயர் பதவி வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்கும் இடத்தில் நான் உள்ளேன். எனவே அன்பழகன் மேயராக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். திருச்சி 27 வது வார்டில் போட்டியிட்ட மு.அன்பழகன் 5430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம் திருச்சி மாநகராட்சி மேயர் இவர் தான் என உறுதியாகிவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர். இதனால் திருச்சி மாநகராட்சியின் முதல் தந்தை மு. அன்பழகன் ஆவார்.