சட்டமன்ற தேர்தலை காட்டிலும் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 


சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று வாக்களித்தார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது மனைவி கிருத்திகாவும் வந்திருந்து வாக்கு செலுத்தினார்.


பின்னர் செய்தியாளார்களுக்கு  உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், “சட்டமன்ற தேர்தலை காட்டிலும் பெரிய வெற்றி கிடைக்கும். 10 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தேன் நல்ல வரவேற்பு இருந்தது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு மக்கள் உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். மேற்கு மண்டலத்தில் கண்டிப்பாக திமுகவிற்கு வெற்றி  வாய்ப்பு இருக்கும். திமுக பண விநியோகம் செய்வதாக வேலுமணி ஆதாரம் இல்லாமல் புகாரளித்துள்ளார்” என்று கூறினார்.


அமைச்சர் பதவி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”எனக்கு அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது  குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவி கொடுத்தால் அப்போது அது பற்றி பேசிக் கொள்ளலாம். முடிவெடுக்க வேண்டியது தலைமைதான்” என்று கூறினார்.




முன்னதாக, பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னையின் 122ஆவது வார்டில் நான் வாக்களித்தேன். இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் வாக்களித்து அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மகாத்மா காந்தி கூறியதை போல் மிகவும் முக்கியமான அமைப்பு. அந்த அமைப்பின் மூலமாக தான் மக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். கோவையில் ராணுவம் வருவதற்கான எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.


அதிமுகவினர் தோல்வி பயத்தால் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். திமுகவினர் தவறு செய்ததாக ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்க தயார். அதிமுகவின் தோல்வியை மூடி மறைப்பதற்கு எஸ்.பி. வேலுமணி தலைமையினான அதிமுகவினர் நாடகம் நடத்தியிருக்கின்றார்கள்” எனப் பேசியுள்ளார். 


தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது. 


இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 


இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண