தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.அதன்படி, மாநகராட்சிகளில் 5.78 சதவீதம், நகராட்சிகளில் 8.21 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 8.21 சதவீதம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நிலவரங்களை கூறி வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்களில் வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் கூடுதல் நேரம் வழங்கும் திட்டம் இல்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குறைவான வாக்குப்பதிவு :
சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 3.96% சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளன.இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் குறைவான வாக்கு பதிவானதாகவும், இனிமேல் சூடுபிடிக்கும் என நம்புகிறேன் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
மற்ற மாவட்டங்கள் 9 மணி நிலவரம் :
ராமநாதபுரம் - 8.88%, தஞ்சை - 6.1%, புதுக்கோட்டை - 11%, சேலம் - 12.97%, தேனி - 12% , கரூர் (தற்போதைய நிலவரம்) - 13.5 %
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்