நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முக்கியமான மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பல இடங்களில் வெற்றியை பெற்று வருகிறது. தற்போது வரை திமுக  தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர், கும்பகோணம்,சேலம், மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இவை தவிர திமுக வேட்பாளர்கள் தற்போது வரை 224 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 976 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 3373 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியுள்ளனர். 


கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தலில், 45 வார்டுகளில் தற்பொழுது வரை 33 வார்டுகள் எண்ணபட்ட நிலையில் 24 வார்டுகளை கைபற்றி திமுக கடலூர் மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றி உள்ளது.


முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.