தேர்தல் என்றாலே பிரச்சாரம் பிரதானம் என்பார்கள். அதுஎந்த கட்சியாக இருந்தாலும், அங்கு வாக்கு கேட்க வேண்டும் என்கிற அடிப்படை மரபு இருக்கும். வாக்களிப்பது மக்கள் விருப்பம்; கேட்பது கட்சிகள் கடமை. அதனால் தான் எந்த தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அத்யாவசியமாகிறது. அந்த வகையில் இந்த தேர்தலிலும், திமுக-அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தவறவில்லை.


திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், டிஜிட்டல் பிரச்சாரம் என்கிற வகையில், மாவட்ட வாரியாக காணொளி பிரச்சாரம் செய்தார். அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் முதல்வரும், கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் நேரடி பிரச்சாரம் செய்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.




இதில் ஒரு கட்சியின் தலைவர் மட்டும், கடைசி வரை பிரச்சாரம் செய்யவில்லை. அது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். கடந்த முறை பல்வேறு தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன், அப்போது சந்தித்த தோல்விகளின் காரணமாக, இம்முறை உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்தார் என பரவலாக பேசப்பட்டது. வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே மேற்கொண்டனர். 


ஆனால், அமமுக இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த தலைமை பிரச்சாரமும் இல்லாமல், கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 


மாநகராட்சி -2


நகராட்சி -33


பேரூராட்சி -66


இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. மொத்தம் 101 வார்டுகளை அக்கட்சி பெற்றிருக்கிறது. இது உண்மையில், வீழ்ந்ததாக பார்க்கப்பட்ட அக்கட்சிக்கு, பெரிய எழுச்சியாகவே பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியையும் கைப்பற்றியிருக்கிறது அமமுக. 




நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அமமுக சார்பில் கோவில்பட்டியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், படுதோல்வி அடைந்தார். அந்த தோல்விக்கு பின், அரசியல் தளத்தில் அவர் ஒதுங்கியிருந்ததாக இருந்தது. தன் மகள் திருமணம் என பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி தினகரன், அரசியல் வேறு புதிய முடிவுகள் எடுக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனாலும், அவரது அமமுக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. 


போட்டியிட்டதோடு, வெற்றியும் பெற்றிருக்கிறது. எண்ணிக்கை என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை தான். ஆனால், விழ்ந்ததாக நினைத்த கட்சி முளைத்திருக்கிறது. அதுவே அக்கட்சிக்கு பெரிய வெற்றியாக தான் பார்க்கப்படுகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எல்லாம், திமுக, அதிமுக வசம் தஞ்சம் அடைந்த நிலையில், அறிமுகம் இல்லாத முகங்களை வைத்து ஆர்ப்பரித்திருக்கிறது அமமுக. 




அதிமுகவின் படுதோல்வி, தங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி, இதை வைத்து அமமுக, மீண்டும் ஒரு இன்னிங்ஸை தொடங்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு சசிகலாவும் தயாராகவே இருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண