நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டின் மொத்த கவனமும் கோவை மீதே இருந்தது. அதற்கு காரணம் இந்த தேர்தல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் போட்டியாக மட்டுமில்லாமல், கெளரவப் பிரச்சனையாக மாறியிருந்ததே காரணம். கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்ற முனைப்போடு அதிமுகவினரும், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் வெற்றி பெற வேண்டும் என திமுகவினரும் கெளரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றினர். அதுமட்டுமில்லாமல் அதிமுகவில் அதிகாரமிக்கவராக விளங்கி வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவிற்கு வெற்றியை தேடி தருவாரா என்பதும் கூடுதல் முக்கியத்துவம் பெற காரணமாக உள்ளது.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில் 5 முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது, இரண்டு முறை நடந்த கோவை மாநகராட்சி தேர்தல்களில் மேயர் பதவியை கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கே வழங்கி இருந்தது. இந்த தேர்தலில் கோவையில் வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள அதிமுகவை எதிர்த்து, முதல் முறையாக நேரடியாக மேயர் பதவியை கைப்பற்றும் முனைப்போடு திமுக களமிறங்கியது.
வலுவான கட்சி கட்டமைப்பு மற்றும் அதிகாரமிக்க தலைவர்கள் திமுகவிற்கு இல்லாததது திமுகவிற்கு பலவீனமாக இருந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி இருவராலும் பெரிய பலன் கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் வியூகம் வகுப்பதில் தேர்ச்சி பெற்றவராக கருதப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக ஈடுபட்டார். உட்கட்சி பூசல்களும், வலுவற்ற கட்சி கட்டமைப்பும் திமுகவிற்கு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தலைவலியாக இருந்தது. கோவை திமுகவினரை நம்பி எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தேர்தல் பணிகளுக்கு கரூரில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்தார். தேர்தலில் போட்டியிட சிபாரிசுகளை நம்பாமல், வெற்றி வாய்ப்பு இருப்பவர்களுக்கு மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி சீட் வழங்கினார். அதேபோல கூட்டணி கட்சியினரையும் அனுசரித்து சீட் வழங்கினார்.
திமுகவில் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பும், அவரது காரை மறித்தும் அதிருப்தி திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உட்கட்சி பூசல் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் அதிமுகவில் எந்த அதிருப்தி குரலும் எழவில்லை. அதனால் ஒரே நேரத்தில் அதிருப்தி திமுகவினரையும், அதிமுகவினரையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியை கைப்பற்றுவதில் திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்தகைய நெருக்கடிகளை சாமாளிக்கும் வகையில் தேர்தல் பணிகளில் கரூர் திமுகவினர் களமிறக்கப்பட்டனர். உள்ளூர் திமுகவினரை நம்பாமல் கரூர் திமுகவினர் மேற்பார்வையில் வாக்காளர்களுக்கு பணம், கொலுசு, ஹாட் பாக்ஸ், குக்கர் என திமுகவினர் வாரி இறைத்தனர். பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், சில முக்கியமான இடங்களில் அது 2000, 3000 என நீண்டது. வாக்குப்பதிவிற்கு சில நாட்களுக்கு முன்னர் ’கரூர் பார்முலா’ எடுபட துவங்கியது. இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குனியமுத்தூர் பகுதியில் கரூர் திமுகவினர் தங்கிருந்த வீட்டின் மீது அதிமுகவினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவமும் நடைபெற்றது.
இதனிடையே வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள கோவையில் தேர்தலில் தோல்வியடைந்தால் கெளரவப் பிரச்சனையாக இருக்குமென்பதால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்கட்சியாக இருப்பதால் அதிமுக வேட்பாளர்கள் செலவு செய்ய தயங்கினர். இதனால் கரூர் பைனான்சியர்களுக்கு எதிராக கோவை ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் களமிறக்கப்பட்டனர்.எஸ்.பி.வேலுமணியின் ஆசி பெற்றவர்களே வேட்பாளராக நியமிக்கப்பட்டதால், திமுகவை போல எந்த அதிருப்தி குரலும் அதிமுகவில் எழவில்லை. தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் கூடுதல் முனைப்போடு பணியாற்றினர். அதிமுகவினரும் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பட்டுவாடா செய்தனர்.
தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை அள்ளி இறைத்தனர். இதனால் தேர்தல் களம் திமுகவிற்கு சாதகமாக மாறியிருப்பதை உணர்ந்த அதிமுகவினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து திமுகவினருக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில் கோவையில் இருந்து கரூர்காரர்களை வெளியேற்ற வேண்டுமென்பதே பிரதான கோரிக்கையாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். கோவையில் முகாமிட்டுள்ள கரூர்காரர்களை வெளியேற்ற வேண்டுமெனவும், தேர்தல் பாதுகாப்பிற்கு துணை இராணுவம் வரவழைக்கப்பட வேண்டுமெனவும் கூறி கடந்த 18 ஆம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. ஒரே ஒரு பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. கோவை மாநகராட்சியில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கொத்தாக அள்ளியது. யாரும் எதிர்பாராத வகையில் கோவை மாநகராட்சியில் வெறும் 3 வார்டுகளில் மட்டும் வென்ற அதிமுக, எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில், 20 வார்டுகளில் டெபாசிட் இழந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டிலும் அதிமுக தோல்வியை தழுவியது. எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதேபோல நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அதிமுக குறைந்த அளவிலான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி மூலம் கோவை அதிமுகவின் கோட்டை என்ற பிம்பத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தகர்த்தெறிந்தார். செந்தில் பாலாஜி தனது தேர்தல் வியூகம் மற்றும் களப்பணியால் திமுகவிற்கு அமோக வெற்றியை தேடி தந்துள்ளார். இதனால் கோவை மாநகராட்சியில் திமுக நேரடியாக மேயர் பதவியை முதல் முறையாக கைப்பற்ற உள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில், திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.