சென்னை, தி.நகர் அருகே தேர்தல் கண்காணிப்பு குழு வாகன சோதனையில், ரூ.5.27 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.


நான்கு முனைப் போட்டியில் தேர்தல் களம்


தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுத் தாக்கல் மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


வேட்பாளர்கள் தங்களின் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதில் வேட்பாளர்கள், மக்களுக்குப் பணம், பொருட்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.


ரூ.5.27 கோடி மதிப்பிலான தங்கம்


இந்த நிலையில், தி.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜி.என்.செட்டி சாலை- பாஷ்யம் சாலையில் இணைப்பு பகுதியில், எஸ்எஸ்டி எனப்படும் தேர்தல் கண்காணிப்புக் குழு சோதனையில் ஈடுபட்டது. இதில், தேர்தல் நிலை கண்காணிப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோவிந்தன், பெண் காவலர் பாக்கியலக்ஷ்மி ஆகியோர் அடங்கிய குழுவினர், எங்கு செல்ல வேண்டும் என்ற ஆவணம் இல்லாமல் நகைகளைக் கொண்டு சென்ற வெள்ளை ஸ்விஃப்ட் காரைப் பிடித்தனர்.




அரசு உதவி கருவூல அலுவலகத்தில் ஒப்படைப்பு


அந்த காரில் இரு ட்ராவல் பேகுகளில் தங்க வளையல் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. அதில் 8 கிலோ எடையிலான தங்கம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5.27 கோடி ஆகும்.உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் நகைகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நகைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு மாம்பலம் – கிண்டி அரசு உதவி கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


இரண்டாவது பெரிய கைப்பற்றுகை


முன்னதாக சேலம், ராசிபுரம் அருகே ரூ.6.02 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதையடுத்து அதிகம் கைப்பற்றுகை செய்யப்பட்ட இரண்டாவது பறிமுதல் இதுவாகும்.