சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர் லைன்மேடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன்தெரு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்களுக்கு வாக்கு இல்லை என்று வாக்குச்சாவடியில் கூறியதால் அதிகாரிகளிடம் வாக்கு செலுத்த வந்த குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த நூர் என்பவரது குடும்பத்தை சேர்ந்த ஜான்பாஷா, ஜரினாபானு, முன்னா, பாத்திமா, பாஷா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இடம் பெயர்த்தல் காரணமாக வாக்கு நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று அரசு தெரிவிக்கும் நிலையில் இவ்வாறு பலபேரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது. எனவே அவ்வாறு இருக்கும்போது, 100 சதவீதம் வாக்குகள் எவ்வாறு பதிவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதேபோன்று சேலம் மாநகர் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் கலாம் என்ற இளைஞர் தர்மபுரியில் இருந்து வாக்களிப்பதற்காக சேலம் வருகை தந்தார். ஆனால் அவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் வாக்கு செலுத்த முடியாமல் வீடு திரும்பினார். கடந்த முறை இதே வாக்குச்சாவடியில் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்திய நிலையில் இந்த முறை வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்று கூறுவது எவ்வாறு என்று கேள்வி எழுப்பினர். குறிப்பாக இந்த வாக்குச்சாவடியில் 100க்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் வாக்கு செலுத்தாமல் திரும்ப சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.