சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1,766 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவுகள் சரியாக 6 மணிக்கு நிறைவு பெற்றது. மேலும் 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13% வாக்குகள் பதிவாகி பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71% வாக்குகளும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 84.46%, ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 82.84%, சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் 75.76%, சேலம் வடக்கு மற்றும் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளில் தளம் 70.72% வாக்குகள் பதிவாகி உள்ளன. சேலம் நாடாளுமன்ற தொகுதி பொருத்தவரை 8,28,152 ஆண் வாக்காளர்கள் 8,30,307 பெண் வாக்காளர்கள் மற்றும் 222 இதர வாக்காளர்கள் என மொத்தம் 16,58,681 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6,55,470 ஆண் வாக்காளர்கள் 6,40,428 பெண் வாக்காளர்கள் மற்றும் 96 இதர வாக்காளர்கள் என மொத்தம் 12,95,994 வாக்காளர்கள் வாக்களித்தனர்.



வாக்கு இயந்திரங்களுக்கு சீல்:


பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு என்னும் மையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


வாக்குப்பதிவு:


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது பரபரப்பாக நடந்து வந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு செல்லலாம் கடமையை ஆற்றி வந்தனர். குறிப்பாக காலை 9 மணி அளவில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 10.77% வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. பின்னர் காலை 11 மணி நிலவரப்படி 28.57%, மதியம் 1 மணி நிலவரப்படி 46.89%, மதியம் 3 மணி நிலவரப்படி 60.05%, மாலை 5 மணி நிலவரப்படி 72.2% மற்றும் மாலை 7 மணி நிலவரப்படி 78.13% வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை விட 0.48% குறைவாகும்.



2019 நாடாளுமன்ற தேர்தல்:


கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் 78.97% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 82.91% வாக்குகளும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 84.17%, ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 81.52%, சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் 75.05%, சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 70.40 மற்றும் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளில் 71.18% வாக்குகளும், சேலம் மாவட்டத்தில் 77.97% வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.