2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நினைவில் கொண்டால் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. திமுக கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்நிலையில் 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி மண்டலவாரியாக பிரிக்கப்பட்ட தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிலை என்ன? மண்டலவாரியாக 2016-க்கும் 2021-க்கும் இடையே காணப்படும் மாற்றங்கள் என்ன பார்க்கலாம்.


தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளை 8 மண்டலங்களாக பிரித்து டெல்டா மண்டலம், சென்னை மண்டலம், கொங்கு மண்டலம், வட தமிழகம், தென் தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய மண்டலம் என பிரிக்கப்படுகிறது. மண்டலவாரியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, டெல்டா மண்டலத்தில் 32 முதல் 34 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது. சென்னை மண்டலத்தில் 11-13 தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் 33-35 தொகுதிகள், வட தமிழகத்தில் 36-38 தொகுதிகள், தென் தமிழகத்தில் 33-35 தொகுதிகள், புதுச்சேரி மண்டலத்தில் 15-17 தொகுதிகளை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது என கணிக்கப்படுகிறது. மொத்தமாக திமுக கூட்டணி 160-172 தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சி அமைக்கும் ABP நாட்டின் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.




2016 தேர்தலோடு ஒப்பிட்டால், மண்டலவாரியாக திமுக கூட்டணி 2021-இல் அசுர வெற்றியை ருசிக்கிறது. டெல்டா மண்டலத்தில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 17 தொகுதிகளை திமுக இந்த முறை அதிகம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகள் அதிகம் பெறவும், கொங்கு மண்டலத்தில் 24 தொகுதிகள் அதிகம் பெறவும், வட தமிழகத்தில் 12 தொகுதிகள் அதிகம் பெறவும், தென் தமிழகத்தில் 8 தொகுதிகள் அதிகம் பெறவும், புதுச்சேரி மண்டலத்தில் 5 தொகுதிகள் அதிகம் பெறவும் வாய்ப்புள்ளது. மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக 68 தொகுதிகள் அதிகம் பெற்று அமோகமாக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.