2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நினைவில் கொண்டால் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்நிலையில் 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி அதிமுக தனது ஹாட்ரிக் வாய்ப்பை இழக்கிறது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளை 8 மண்டலங்களாக பிரித்து டெல்டா மண்டலம், சென்னை மண்டலம், கொங்கு மண்டலம், வட தமிழகம், தென் தமிழகம்,புதுச்சேரியை ஒட்டிய மண்டலம் என பிரிக்கப்படுகிறது.
மண்டலவாரியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, டெல்டா மண்டலத்தில் 7முதல் 9தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றுகிறது. சென்னை மண்டலத்தில் 3முதல் 5 தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் 17-19 தொகுதிகள், வட தமிழகத்தில் 8-10 தொகுதிகள், தென் தமிழகத்தில் 21-23 தொகுதிகள், புதுச்சேரி மண்டலத்தில் 2-4 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது என கணிக்கப்படுகிறது. மொத்தமாக அதிமுக கூட்டணி 58-70 தொகுதிகளை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ஹாட்ரிக் வாய்ப்பை இழக்கும் என ஏபிபி நாட்டின் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.
2016 தேர்தலோடு ஒப்பிட்டால், மண்டலவாரியாக அதிமுக கூட்டணி 2021-இல் பலத்த தோல்வியை சந்திக்கிறது. டெல்டா மண்டலத்தில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 15 தொகுதிகளை அதிமுக இந்த முறை இழக்கிறது. அதேபோல் சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகளும், கொங்கு மண்டலத்தில் 24 தொகுதிகளையும் அதிமுக இழக்கிறது. வட தமிழகத்தில் 13 தொகுதிகளையும், தென் தமிழகத்தில் 10 தொகுதிகளையும், புதுச்சேரி மண்டலத்தில் 6 தொகுதிகளையும் அதிமுக இழக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக 70 தொகுதிகளை இழக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.