சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின்  19ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்


தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 142 இடங்களின் முன்னிலையில் உள்ளது. அடுத்தப்படியாக அதிமுக 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 




சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் , கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க  நகர் , எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி , ஆயிரம் விளக்கு , அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி என 16  சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெரிய வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 19177 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 




சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைப் பொருத்தவரை திமுக தலைவர் மு.கருணாநிதி தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியாகும். கடந்த 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடினார். வாரிசு அரசியல் விமர்சனத்துக்குள் சிக்கி முதன்முதலாக அரசியல் களம் காணும் உதயநிதிக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியே சரியாக இருக்குமென சரியாக கணித்து களம் இறக்கியது திமுக. உதயநிதிக்கு எதிராக பாமக வேட்பாளரை களம் இறக்கியது அதிமுக.  உதயநிதிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்ட நிலையில் அதனை உண்மையாக்கி வருகிது தேர்தல் முடிவு. கிட்டத்தட்ட 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறிச் செல்லும் உதயநிதி தன்னுடைய முதல் தேர்தலில் நிச்சயம் வெற்றிவாகை சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.