தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலில் 25 சதவீத வாக்குகளை பெறுவோம் என்று முதல் முறையாக அண்ணாமலை தெரிவித்துள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 3.6 சதவீத வாக்குகளை தமிழ்நாட்டில் பெற்ற பாஜக, இம்முறை எப்படி 25 சதவீத வாக்குகளை பெறும் என்ற விவாதமும் அண்ணாமலையின் கருத்தால் எழுந்துள்ளது.


மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்திற்கு அண்ணாமலை அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுவரை கருத்து கணிப்பு முடிவுகளில் தமிழக பாஜகவின் வாக்கு சதவீதம் உயரும் என்ற முடிவுகள் வந்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அண்ணாமலையும் அதை வெளிப்படையாக பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.


அண்ணமலையிடம் கேள்வியை முன்வைக்கும் நெறியாளர் 370க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று பிரதமர் டார்கெட் கொடுத்துள்ளார், அப்படி என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி தென்னிந்தியாவில் உள்ள 130 தொகுதிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அப்படி இருக்கையில் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாடு பாஜகவின் முகமாக நீங்கள் இருக்கிறீர்கள், இதுவரை பாஜக தமிழ்நாட்டில் 5 சதவீத வாக்குகளை தாண்டியதில்லை, அப்படி இருக்கையில் 2024 மக்களவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகள், எத்தனை சதவீத வாக்குகள் நீங்கள் பெறுவீர்கள்? என்று கேள்வியை முன்வைக்கிறார்.


அதற்கு பதிலளித்த அண்ணாமலை “இந்த மக்களவைத் தேர்தல் மிகவும் கடுமையான ஒன்று காரணம் மும்முனை போட்டி நிலவ போகிறது. ஒரு பக்கம் திமுக, அதே கூட்டணி கட்சிகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்கிறார்கள். ஆளும் கட்சியாகவும் இருக்கிறார்கள், களத்தில் இறங்கி வேலை செய்வதற்கான ஆட்களும் நிறைந்துள்ளார்கள் என்பதால் அனைத்து விதத்திலும் பலமானவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் ஒரு பக்கம். 


இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒன்று பாஜக மற்றொன்று அதிமுக. இதில் என்னால் உறுதியாக ஒரு விஷயத்தை சொல்ல முடியும், இம்முறை தமிழ்நாட்டில் பாஜக பெறும் வாக்குகள் வரலாற்று சாதனையாக இருக்கும். இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை என்ற அளவில் இருக்கும். குறிப்பாக 18 முதல் 33 வயதுடைய இளைஞர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு சதவீதமாக உள்ளது. அவர்களின் சிந்தனைகளும் கொள்கைகளும் முற்றிலுமாக வேறு விதமாக உள்ளன. 2004 முதல் 2014 வரை இந்தியாவை காங்கிரஸ் எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் செயல்பாட்டை பார்த்திருப்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் இதுவரை ஒன்று திமுக அல்லது அதிமுக ஒட்டுமொத்தமாக தொகுதிகளை வெல்லும் என்ற நிலை தான் இருந்து வருகிறது.


ஆனால் இம்முறை நான் நிச்சயமாக சொல்கிறேன். மிக எளிதாக 25 சதவீதம் வாக்குகளை தமிழக பாஜக வரவிருக்கும் தேர்தலில் பெறும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.


அதற்கு “என்னது 25 சதவீத வாக்குகளா? தற்போதைய நிலையை விட ஐந்து மடங்கு வாக்குகளை அதிகமாக பெறுவீர்களா? 500 சதவீத வளர்ச்சியா?” என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.


அதற்கு ஆமாம் உறுதியாக சொல்கிறேன் என்று அண்ணாமலை பதில் அளித்தார்.


பின்னர் நான் உங்களுக்கு சவால் விடலாமா என்று நெறியாளர் கேள்வி கேட்க, ”இதை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள், நான் எங்கும் ஓடி விட போவதில்லை. போன் போட்டால் நிச்சயமாக எடுப்பேன், வாக்கு எண்ணிக்கை அன்று எனக்கு கால் செய்யுங்கள். களத்தை நன்கு ஆராய்ந்து வைத்துள்ளோம், நிச்சயமாக 25% வாக்குகளை பெறுவோம்” என்ற அண்ணாமலை பதிலளித்துள்ளார்