தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

Continues below advertisement

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்து அதன்பின் ஆளுநர் பதவியேற்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என ஆளுநர் மாளிகை தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதற்கிடையே திருப்பூர் சென்றிருந்த ஆளுநர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி மூன்று நாள் பயணமாக இன்று காலை டெல்லி சென்றுள்ளார் ஆர்.என். ரவி. 3 நாள் பயணம் முடித்துவிட்டு 16 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். பொன்முடி அமைச்சராக பதிவியேற்க கடிதம் அனுப்பிய நிலையில் அவர் டெல்லி சென்றுள்ளார். இதனால் பொன்முடிக்கு 16 ஆம் தேதிக்கு பின் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

Continues below advertisement

பொன்முடி ஏற்கனவே உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். தற்போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பொன்முடி அமைச்சராக பதவியேற்ற பின் மீண்டும் அந்த உயர் கல்வி துறை பொன்முடிக்கு ஒதுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி:

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.  இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது. இதற்கு முன்,  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடி அமைச்சர் பதவி இழந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.