தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை பணகுடி பேரூராட்சியின் 4ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் மனுவேல் மற்றும் அதிமுக வேட்பாளர் உஷா ஆகியோர் 266 வாக்குகள் பெற்று இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது, நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது, இந்த 55 வார்டுகளுக்கும் 491 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது, அதே போல அம்பாசமுத்திரம் நகராட்சி உள்ள 21 வார்டுகளுக்கும் 42 வாக்குச்சாவடியும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் 51 வாக்குச்சாவடியும், களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டு இருந்தது, அதே போல 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 319 வாக்குச்சாவடிகளில் ஆக மொத்தம் 397 வார்டுகளுக்கு 933 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
நெல்லையில் மேயர் பதவியை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி இதுவரை 4 பொதுத்தேர்தலையும், 1 இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது, இதில் 3 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் ஆட்சி புரிந்து உள்ளது. 1996 மற்றும் 2001 தேர்தலில் பட்டியலின பெண்களுக்கான தொகுதியாக இருந்தது, அப்போது மக்கள் நேரடியாக மேயரை தேர்ந்தெடுத்தனர், அதன் பின்னர் பொது ஆண் தொகுதியாக மாற்றப்பட்டு மறைமுக மேயர் தேர்தல் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்