திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர் கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள் திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்களும் மற்றும் மன்னார்குடி குடவாசல் ஒன்றியங்களைச் சேர்ந்த ஒருசில ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 



திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 726 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 166 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 28 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 920 வாக்காளர்களை கொண்டுள்ளது திருவாரூர் தொகுதி.



 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1997 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பிரிந்தது. சோழ மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி செய்த திருவாரூர் சென்னை நகரம் மாகாணமாக இருந்தபோது பேரவை தொகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்பிகாபதி 1967 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தனுஷ்கோடி சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

 

சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் ஆனபிறகு 1971 ஆம் ஆண்டு தாழை மு.கருணாநிதி திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கடுத்து நடைபெற்ற 1977 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார்.

 



1980 மற்றும் 84 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரும் 89 மற்றும் 91 ஆகிய தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தம்புசாமி என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அதன் பின்னர் 96 மற்றும் 2001 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அசோகன் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

தொடர்ந்து 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 2016 ஆம் ஆண்டு திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை பெற்றார்.

 



அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்தை விட 68 ஆயிரத்து 366 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் திமுக ஆட்சியமைக்க முடியவில்லை. திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளையாக இருந்தாலும் அவரிடம் கேட்டால் சொந்த ஊர் திருவாரூர் என்றுதான் கூறுவார் என அவரது நண்பர்கள் கூறுவர். 

கருணாநிதி மறைவுக்கு பின் , 2019ம் ஆண்டு திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் போட்டியிட்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காமராஜ் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி என்பவரும் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அருண் சிதம்பரம் என்பவரும் போட்டியிட்டனர்.

 



ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்தை விட 64 ஆயிரத்து 577 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அதிமுக தொடங்கப்பட்டு இதுவரை திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தொடர்ந்து ஆறு முறை திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றிபெற்று தொகுதியை தனது கோட்டையாகவே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்முறை அதை அதிமுக தகர்க்கிறதா? அல்லது திமுக தன் கோட்டையை தக்க வைக்கிறதா என்பதை நாளைய முடிவுகள் நமக்கு தெரிவிக்க உள்ளது.