திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 25 ஆவது வார்டுக்கான வாக்குப்பதிவு சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 8 நபர்கள் போட்டியிட்டனர். நண்பகல் 12 மணியளவில் வாக்குமையத்தில்  கள்ள ஓட்டு போடப்பட்டு உள்ளதாக கூறி வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதம்  செய்தனர். 




பிரதான கட்சி வேட்பாளர்களின் வாக்குவாதத்தால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினரையும் காவல்துறையினர் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் காவல் துறையினருக்கும் பிரதான கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரமடைந்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வாக்குப்பதிவை நிறுத்தி மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அவர்கள் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியிடம் வலியுறுத்தினர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அங்கு வந்த மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறி தேர்தல் நடத்தும் மாவட்ட அதிகாரி முருகேஷிடம் மனு அளித்தனர். 



இதையடுத்து மாலை 6 வரை வாக்குப்பதிவு எந்தவித தடையுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,  தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 25ஆவது வார்டில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த வார்டில் 1590 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் காலை முதலே மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  



இந்த வாக்கு பதிவு நடைபெற்று வரும் வாக்கு சாவடி மையத்திற்கு அருகில் 5 இடங்களில் தடுப்புகள்  அமைக்கப்பட்டு 200க்கும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வரக்கூடிய வாக்காளர்களிடம் உரிய வாக்குச்சீட்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து பரிசோதனை பிறகே வாக்கு அளிக்க காவல்துறையினர் அனுமதி அளித்து வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் ஆய்வு நடத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் செட்டி இருந்தார். வாக்குச்சாவடியில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மறு வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது