திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நேர நிலவரப்படி 41.37% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சுயச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி பழனி ஆதரவாக வார்டில் உள்ள பொது மக்களை வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிப்பதாக கூறியும் வெளிவார்டில் உள்ள வாக்காளர்கள் கள்ள ஓட்டு போடுவதாக கூறி திமுக, அதிமுக, பாஜக, வேட்பாளர்கள் முகவர்கள் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 12 மணி அளவில் 25 வது வார்டில் 57 பூத்தில் 50 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜென்டுகள் ஒன்று சேர்ந்து வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 12 மணி அளவில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் உள்ளிட்டவர்களை அதிரடியாக வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதனை தொடர்ந்து திமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் இட்டு வாக்குச்சாவடி மையம் நுழைவாயிலில் முற்றுகையிட்டனர்.அரை மணி நேரத்திற்கு மேலாக முற்றுகை போராட்டம் தொடர்ந்த நிலையில் சுயச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையை கண்டித்து வாக்குச்சாவடி மையம் முன்பு திருவண்ணாமலை - செங்கம் சாலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மற்றும் தேர்தல் அலுவலர் பார்த்தசாரதி உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களிடம் சமாதானம் செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் முடிவில் அதிமுக மற்றும் திமுக, பாஜக வேட்பாளர்கள் தேர்தலை நிறுத்த வேண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என புகார் மனு அளித்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அவர் தேர்தல் தொடர்ந்து நடத்தப்படும் எனறு கூறினார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா முன்னிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டதாக கூறி ஆளும் கட்சியினரே சாலையில் இறங்கி போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.