தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளது. இதில் வந்தவாசி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட 18 ஆவது வார்டில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பிரியா (32) போட்டியிடும் நிலையில், அதே வார்டில் அவரது தாய் கோட்டீஸ்வரி (58) சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். தாய், மகள்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தாயும் மகளும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவது அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து அதிமுக வேட்பாளர் பிரியாவின் கணவர் ஆறுமுகம் கூறுகையில், சென்ற 2011 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நான் இதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டேன். ஆனால், என்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும் கூறினார். தபால் ஓட்டு எண்ணிக்கையில் தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகளால் நான் தேர்தலில் தோல்வியடைந்ததாக கூறினார். தற்போது, இந்து முன்னணியின் திருவண்ணாமலை மாவட்ட (வடக்கு) பிரிவு பொதுச்செயலாளராக இருக்கும் ஆறுமுகம் இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த முறை போட்டியிட முடியவில்லை. அதனால், அவர் தனது மனைவியை களமிறக்க முடிவு செய்தார்.
வெற்றியை சீர்க்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரியாவுக்கு எதிராக அவரது தாய் கோட்டீஸ்வரியை திமுக களம் இறக்கி உள்ளதாகவும், இந்த முறை நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புவதாகவும் ஆறுமுகம் கூறி உள்ளார்.
அதிமுக வேட்பாளர் பிரியாவின் அண்ணன் ஜெகனிடம் பேசுகையில்: வந்தவாசி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 18 வது வார்டு திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு சட்டமன்ற தேர்தலில் நான் கட்சிக்காக உழைத்தால் எனக்காக இந்த வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் எங்கள் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக எந்த வார்டுக்கு சம்பந்தம் இல்லாத நபரை வேட்பாளராக ஆக்க வேண்டும் என அவர் காங்கிரஸ் சார்பில் சீட்டு அளித்துள்ளார்.
இதனால் நான் திமுக கட்சியனரை நாடிச் சென்று அவர்களிடம் இதைப் பற்றி பேசினேன் அதன் பிறகு இப்பகுதியில் ஒதுக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு வேறு ஒரு வார்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது எங்களை அதே வார்டில் திமுக சார்பில் களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் என்னுடைய தங்கை அதிமுக கட்சியில் போட்டியிடுகறார் நாங்கள் திமுக சார்பில் போட்டியிடுகிறோம் எங்களுக்கும் எங்களுடைய தங்கைக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகள் இல்லை என்று தெரிவித்தார்.