தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தென்காசி மாவட்டத்தை பொருத்த வரையில் 06.10.2021 தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 09.10.2021 அன்று தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 6ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்திருந்தனர். மாலை 6 மணியுடன் முடிந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நாளின் முடிவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் பதிவான வாக்குகளின் விபரம்
ஆலங்குளம் : 75.15% (85,630)
கடையம் : 71.87% (61,279)
கீழப்பாவூர் : 75.24% (82,468)
மேலநீலிதநல்லூர் : 74.64% (46,789)
வாசுதேவநல்லூர் : 71.59% (44,785)
மொத்தம் ஐந்து ஒன்றியங்களில் பதிவான வாக்கு விகிதம் : 73.95% (3,20,951).
இதனிடையே நடந்து முடிந்த முதற்கட்ட வாக்கு பதிவின் போது தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சி வார்டு எண் 2 மற்றும் 3க்கு பொதுவாக அமைக்கப்பட்ட இரு வார்டு வாக்கு சாவடி எண் 130ல் 2வது வார்டுக்கான உறுப்பினர் பதவி இடம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வார்டை சேர்ந்த 45 வாக்காளர்கள் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலுக்காக வாக்கு அளித்திருப்பதாக தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்து வார்டு 3ல் மறு தேர்தல் நடத்திட அனுமதி கோரியதன் அடிப்படையில் சிவசைலம் கிராம ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் 09.10.2021 அன்று மறு வாக்கு பதிவு நடத்திட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று வாக்குப் பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், குருவிகுளம், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று 72 வகையான தேவையானபொருட்கள் வாக்குச்சாவடிக்கு வாகனங்களில் இன்று அனுப்பப்படுகிறது. தேவையான வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள், பசை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நாடா, சட்டம் உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் தயார் நிலையில் உள்ளன இந்த பொருட்களை ஏற்றிச் செல்ல மண்டலத்திற்கு ஒரு வாகனம் என அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன இந்த வாகனங்கள் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது தேர்தல் தொடர்பான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்சென்று வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் ஒப்படைக்கப்படும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் தனது சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.