சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, "சாதாரண தேர்தல் களம் அல்ல. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த கூட்டணி. மதுவில்லாத தமிழகத்தை உருவாக்கும் டாக்டர் ராமதாஸின் கனவை நிறைவேற்ற வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தேர்தல். தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே யார் வருவார்கள் என்று தெரிந்து வாக்களிக்கும் 3வது தேர்தல். பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக ஆட்சியாளர் போகிறார்கள் என்று தெரிந்து நடக்கின்ற தேர்தல். 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் உலக அளவில் ஐந்தாவது நாடாக உள்ளோம். பாஜக ஆட்சியில் வறுமை கோட்டிற்கு மேலே கோடிக்கணக்கான மக்களை கொண்டு வந்துள்ளோம்.



பிரதமர் மோடி மீண்டும் வரும்போது பொருளாதாரம் வளர்ச்சி என்பது அதிகமாக இருக்குமே தவிர குறையாது. இந்திய கூட்டணியில் எதுவும் செய்ய முடியாது, பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாது. இன்னும் அவர்களுக்குள் முடிவு செய்யவில்லை. ஒரு நண்டு மற்றொரு நண்டு இழுப்பது போல, எந்த நண்டும் மேலே வரப்போவதில்லை. பாஜக அமைச்சரவையில் 76 அமைச்சர்கள் உள்ளனர். இதில் பெண்கள், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். இதுதான் சமூக நீதி. சமூக நீதிக்கான ஆட்சி பாஜக ஆட்சி தான். சமூக நீதி தலைவர் இருக்கிறார் என்றால் பிரதமர் மோடி தான். முழுமையான இறையாண்மை இருக்கின்ற நாட்டை பிரதமர் உருவாக்கி உள்ளார். இந்திய கூட்டணி முன்னோடி என்பது இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க சக்தி கிடையாது. இந்தியாவை கூறு போட்டு விற்று விடுவார்கள். வருங்காலத்தில் இந்தியா உலக அளவில் மூன்றாவது பொருளாதார மாறப்போகிறது. தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக அரசு தேவையில்லாத ஆணி. அடுத்த ஐந்து ஆண்டு கட்டமைப்பை உருவாக்கும் வருங்கால இந்தியாவை உருவாக்க உள்கட்டமைப்புக்காக செலவிட வேண்டும். இந்தியாவின் உள்கட்டமைப்பு உருவாக்கியதனால் அடுத்த தலைமுறை நாட்டில் வாழும். 33 மாத காலத்தில் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்தையும் தமிழகத்தில் உயர்த்துகின்றனர்.



தொடர்ந்து, பாஜகவில் ரவுடிகள் அதிகம் உள்ளதாக முதல்வர் பேசியது குறித்து அண்ணாமலை பேசினார். ”வீரபாண்டி ஆறுமுகத்தை விடவா ரவுடிசம் செய்துவிட்டோம். தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும்போது முதலமைச்சர் வந்து பாடம் எடுத்து வருகிறார். யோக்கியன் வருகிறார், சோப்பு எடுத்து உள்ளே வையுங்கள் என்று சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் பேச்சு உள்ளது. மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தின் வாரிசுகள் வறுமைக் கோட்டின் கீழ் சிரமத்தில் உள்ளனர். மொழிப்போர் தியாகிகள் குறித்து இவர்கள் பேசுகிறார்கள். ஆயிரம் ரூபாய் வாங்கி தான் பேரன்லவ்லி போட்டு உள்ளார்கள் என்று பேசுவது குறித்து விமர்சனம் செய்தனர். வாய் திறந்தால் கேவலமாக பேசும் ஆட்சி தான் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையான ஒன்று எனவும் பிரதம மந்திரியின் காலணியின் அழுக்கிற்கு கூட ஒப்பில்லாதவர். சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டிக்கு மட்டும் 942 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடு கட்டத் திட்டம் முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பாரதிய ஜனதா கட்சி. கடந்த பத்து ஆண்டுகளில் அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடியாக செல்ல காரணமாக இருந்த பாஜக கட்சியின் ஆட்சி தொடர சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.