வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 28 ம் தேதி முதல் 4 ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 4573 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1130 பேரும், 7 நகராட்சிகளில் உள்ள 1097 வார்டுகளில் போட்டியிட 1097 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதேபோல 33 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டுகளில் போட்டியிட 2346 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து 146 பேரின் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.


இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் என்பதால், சில வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதன்படி மொத்தம் 1052 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். கோவை மாநகராட்சியில் 264 பேரும், நகராட்சிகளில் 206 பேரும், பேரூராட்சிகளில் 582 பேரும் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதனால் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 778 பேரும், நகராட்சிகளில் உள்ள 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 861 பேரும், பேரூராட்சிகளில் உள்ள 504 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1727 பேரும் போட்டியிடுகின்றன.ர். கோவை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் மொத்தம் 802 பதவிகளுக்கு 3366 பேர் போட்டியிடுகின்றனர்.




இந்நிலையில் கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியை திமுக பெரும்பான்மை பலத்துடன் போட்டியின்றி கைப்பற்றியுள்ளது. பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 8 திமுக வேட்பாளர்களும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் தேர்தலுக்கு முன்பே ஒரு பேரூராட்சியை திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் பெரிய நெகமத்தை தவிர வேறு எந்த பகுதியிலும் போட்டியின்றி யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த மூன்றாவது வார்டில் பிரியா, 6 வது வார்டில் பரமேஸ்வரி, 7 வது வார்டில் தேவிகா, 8 வது வார்டில் நந்தவேல் முருகன், 11 வது வார்டில் கஸ்தூரி, 12 வது வார்டில் கலைமணி, 14 வது வார்டில் நாகராஜ், 12 வது வார்டில் சபரீஸ்வரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். இதேபோல 9 வது வார்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் ரவி போட்டியின்றி தேர்வானர். இந்த 9 வார்டுகளில் மட்டும் 12 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்ற 6 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 14 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.




இது குறித்து அப்பகுதி திமுகவினரிடம் கேட்ட போது, “திமுக அரசின் சாதனைகள் தான் இந்த வெற்றிக்கு காரணம். பல திட்டங்களை பெரிய நெகமம் பகுதிக்கு திமுக அரசு கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை சொல்லியும், ஆளுங்கட்சியாக இருப்பதால் செய்ய உள்ள திட்டங்கள் குறித்தும் மக்களிடமும், எதிர்கட்சியினரிடம் எடுத்துரைத்தோம்.. அதனை ஏற்றுக் கொண்ட எதிர்கட்சியினர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அதனால் பெரும்பான்மை பலத்துடன் தேர்தலுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி திமுக கைப்பற்றியுள்ளது. பேரூராட்சி தலைவர் யார் என்பதை திமுக தலைமை முடிவு செய்யும்” எனத் தெரிவித்தனர்.