தங்க தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கல்:
தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக திறந்த வேனில் நின்றபடியே தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக வருகை தந்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் முன்பாக பேரணியாக வந்த திமுகவினர் நிறுத்தப்பட்டு திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர்கள் வந்த 2 வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
வேட்பு மனுவை மறந்து வந்த தங்க தமிழ்செல்வன்:
தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் வேட்பு மனு தாக்களுடன் புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் கேட்கவே தனது வேட்பு மனு குறித்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு நினைவு வந்தது. தன்னுடைய காரில் வேட்பு மனு தாக்கல் வைத்திருந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மாற்று காரில் ஏறி வந்ததால் அவர் வந்த வாகனம் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. இரண்டு கார்களை மட்டும் போலீசார் அனுமதித்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் காரை அனுமதிக்கவில்லை. பின்னர் உடனடியாக தனது உதவியாளரிடம் தனது காரில் உள்ள சென்று வேட்பு மனுவை எடுத்து வர கூறினார்.
அமைச்சர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுக்காக காத்திருந்த நிலையில் தனது உதவியாளர்கள் இருசக்கர வாகனத்தில் வேட்பு மனுவை எடுத்து வந்தனர். வந்த பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு:
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், டிடிவி தினகரன் 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் வனவாசம் சென்றது போல் மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக கூறி வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வனவாசம் சென்றவர் அப்படியே சென்றிருக்க வேண்டியதுதானே கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் வந்தால் தொகுதி மக்களிடம் எவ்வளவு குறைகள் இருக்கும் என டிடிவி தினகரனை விமர்சித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். அதனை தொடர்ந்து, இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்களை தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் பின்னர் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.
அதிமுகவை மீட்பதற்கு தினகரனும், பன்னீர்செல்வமும் ஒரே சின்னத்தில் நின்று இருக்க வேண்டும் அதை விட்டுட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடகம் ஆடுகிறார்கள் என்று பேசினார். தனக்கு யாரும் போட்டியில்லை எனவும் இந்த முறை பெருவாரியான வாக்கு மூலம் தான் வெற்றி பெற மக்கள் தீர்ப்பளிப்பார்கள் எனவும், தனக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருப்பதாகவும் கூறினார். ஓபிஎஸ் , டிடிவி தினகரனிடம் தொண்டர்கள் பலம் இருந்திருந்தால் இருவரும் சேர்ந்து ஒரு சின்னத்தில் போட்டியிட்டுருக்கலாம் அதை விட்டுவிட்டு இருவரும் நாடகமாடுகின்றனர் எனவும் பேசினார். பிஜேபி ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.