தமிழக அரசின் சின்னத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம், தித்திக்கும் பால்கோவா, அரியும் சிவனும் ஒன்றே என உலகிற்கு காட்சி கொடுக்கும் சங்கரன்கோவில், பொதிகை மலை சாரல், குற்றால அருவிகள் என பல்வேறு சிறப்புகளை கொண்ட தொகுதியில் தென்னை, மா எலுமிச்சை, பூக்கள், அதிக அளவில் நெல் சாகுபடியால் அரிசி ஆலைகள், உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாக தென்காசி பாராளுமன்ற தொகுதி விளங்குகிறது. தமிழகத்தின் 37வது தொகுதியான தென்காசி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என மூன்று தனி தொகுதிகளையும் மற்றும் ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி ஆகிய 3 பொது சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இதில் 15 லட்சத்து 16 ஆயிரத்து ,183, பேர் வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்கள் 7,42,158, பெண் வாக்காளர்கள்: 7,73,822 மூன்றாம் பாலினத்தவர் 203, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் 31,664 பேர் கூடுதலாக உள்ளனர்.
1957-இல் தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இந்த தொகுதி விளங்கி வந்துள்ளது. தொடர்ந்து ஒன்பது முறை காங்கிரஸ் கட்சியும் ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும், திமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதி உருவாக்கப்பட்டு 62 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ல் முதன் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தனுஷ் எம். குமார் வெற்றி பெற்றார். இவருக்கு 4, லட்சத்து 76, ஆயிரத்து 156 வாக்குகள் கிடைத்தது. இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட Dr.கிருஷ்ணசாமி 3, லட்சத்து 55, ஆயிரத்து 870 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அமமுக சார்பில் போட்டியிட்ட பொன்னுத்தாய் மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட மதிவாணன் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் தனுஷ் எம் குமார் தந்த வாக்குறுதியும் செய்ததும், தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதோடு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவசாயத்தை பேணிக்காப்பேன், மேலும் தென்காசியில் இருந்து கூடுதல் ரயில்சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி தற்போது சென்னை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் ரயில்வே சேவை துவங்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததின் பெயரில் அம்ரூத் திட்டம் மூலமாக தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ரயில் நிலையங்களில் 12 கோடி ரூபாய் செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய நிலங்களை பாதுகாப்பேன் என தெரிவித்த எம்பியால் தற்போது பல ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் திருமங்கலம் -கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்தால் அழிவதை தடுக்க முடியவில்லை. மேலும் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக வடகரை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் உள்ள தென்னை, எலுமிச்சை, வாழை, உள்ளிட்ட விவசாய நிலங்களை பாழாக்கும் நான்கு வழிச்சாலை திட்டப்பணி துவங்குவதற்காக, முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று உள்ளது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு பதிலாக மாற்றுப் பாதையை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசுதேவநல்லூர் தொகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டதால் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பிற்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்பில் உள்ளனர். வெல்லம் காய்ச்சும் தொழிலுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தரப்படவில்லை. செண்பகவல்லி அணைக்கட்டு சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் முழுவதுமாக தமிழகத்துக்கு வராமல் கேரளா நோக்கி செல்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மேலும் இந்த அணையை சரிசெய்தால் விருதுநகர் தூத்துக்குடி, மாவட்டங்களுக்கு குடிநீர் வசதி அளிக்க முடியும் என்பதால் இப்பகுதி மக்கள் காத்திருந்தோம். ஆனால் ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்தபணியும் நடக்கவில்லை என்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளும் விருதுநகர் மாவட்டத்தின் இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியது தான் தென்காசி நாடாளுமன்ற தொகுதி.