கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துவிட்டு அதை ஈடுகட்ட ஏழை மக்களிடம் அரசு டிஜிட்டல் வழிப்பறி செய்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார். 


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி!


ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?


சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.


கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?


 






இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என கேள்வி எழுப்பியுள்ளார். 


மோடியின் குடும்பம்தான் அமலாக்கத்துறை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


மக்களவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் குடும்பம்தான் சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? “பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ…






ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” என குறிப்பிட்டிருந்தார்.