தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தலைவராக பதவியேற்ற பிறகு எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் செயல்பாடுகள் பொதுவெளியில் வருவது பெரியளவில் குறைந்துவிட்டது.
நீதி கிடைக்க வேண்டும்:
இந்த சூழலில், தமிழக பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கல்யாண ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார். இதுதொடர்பாக, அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“ கலகத்தில் தான் நீதி பிறகும் என்பார்கள். அண்ணாமலை தனக்கு என்று டெல்லியில் ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளார். இதுவே அவரை பாதுகாப்பாக வைத்துள்ளது. பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, இல.கணேசன் உள்பட கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
வார்ரூம் குண்டர்கள்:
கிருஷ்ணகுமார்முருகன், அமர்பிரசாத்ரெட்டி, ஜானி ராஜா உள்ளிட்ட சில குண்டர்களால் வார் ரூம்கள் நடத்தப்படுகிறது. அண்ணாமலை யார்? அவர் கர்நாடகாவில் என்ன செய்து கொண்டிருந்தார்? அங்கு உளவு பார்த்ததற்காக அப்போதைய அரசியல் தலைமையால் அவர் கர்நாடகாவில் இருந்து எப்படி தூக்கி வீசப்பட்டார்?
அண்ணாமலையை கட்சியின் செலவுகளில் விளம்பரப்படுத்திக் கொள்ளவும், கட்சியின் செலவில் மற்ற தலைவர்களை சிறுமைப்படுத்தவுமே வார்ரூம் இரண்டு வேலைகளுக்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியவர்கள், தங்கம் கடத்துபவர்கள், கோடிக்கணக்கில் மோசடி செய்பவர்களிடம் இருந்து பணம் பறிப்பது போன்று கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர் மாஃபியாவாக செயல்படுகின்றனர்.
கடவுளுக்குத்தான் தெரியும்:
அவர்களின் கொள்கையே மற்ற பா.ஜ.க. தலைவர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாக உள்ளது. இல.கணேசன் இல்ல விழாவிற்கு மம்தா பானர்ஜி வந்து சந்தித்ததை அரசியல் அறிவற்ற இந்த குண்டர்கள் விமர்சித்தனர். புதியதாக யாரும் உருவாக வேண்டும் என்று அண்ணாமலை ஒருபோதும் விரும்பியதில்லை. அதுமட்டுமின்றி, முக்கியமானவர்களை எல்லாம் விடுத்துவிட்டு அமர்பிரசாத் ரெட்டி போன்றவர்களை விளம்பரப்படுத்த நினைக்கிறார். இதெல்லாம் எதற்கு என்று கடவுளுக்குத்தான் தெரியும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழிசை சவுந்திரராஜன் நேற்று தன்னை உருவக்கேலி செய்தது குறித்து ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசை சவுந்தர்ராஜன் உட்கட்சியைச் சேர்ந்தவர்களே கேலி பேசியது பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியதுடன், பா.ஜ.க.விலும் பரபரப்பை ஏற்படுத்தியது.