மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வாக்குப்பதிவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே தயாராகி கொண்டிருந்தது.


வாக்குப்பதிவு நிறைவு:


தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.


வாக்குப்பதிவை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணி வரை 63.20 சதவீத வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெறுவதற்கு சற்று முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து, டோக்கன் வைத்திருந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். தருமபுரியில் அதிகபட்சமாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.


சீலிடப்பட்ட அறையில் வாக்கு இயந்திரங்கள்:


வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிக்கு உரிய பூத் ஏஜெண்டுகள் முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர், வாக்கு இயந்திரங்கள் பத்திரமாக வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.


வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீலிடப்பட்டு, அந்த அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.


5 மணி நிலவரம்:


5 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக தருமபுரியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாமக்கல்லில் 67.37 வாக்குகளும், ஆரணி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 57.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்:


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது தொகுதியில் வாக்கு செலுத்தினர். மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு போன்றோரும், மற்ற அமைச்சர்களான உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோரும் அவரவர் தொகுதியில் வாக்கு அளித்தனர்.


திரை பிரபலங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, திரிஷா, அனிருத் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்களித்தனர். பிரபல நடிகர் சூரிக்கு மட்டும் வாக்கு இல்லை என்று கூறியதால் அவர் வாக்கு செலுத்தாமல் திரும்பி வந்தார்.


பல இடங்களில் மக்கள் வாக்கு அளிக்க மாட்டோம் என்று புறக்கணித்தனர். இதனால், அங்கு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நீண்ட நேரத்திற்கு பிறகு வாக்களிக்க வைத்தனர். பல இடங்களில் முதியவர்கள் தள்ளாத வயதிலும் தங்களது ஜனநாயக கடமையை நேரில் வந்து முறையாக ஆற்றினர்.