தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.


தமிழக வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர்?


தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் (சுமார் 6.23 கோடி) உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்- 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467 பேர் ஆவர். இதில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் ஆவர்.


வாக்குச் சாவடிகள் எத்தனை?


தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்களிக்க ஏற்ற வகையில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இந்த 181 வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர். 65% வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.


எனினும் வாக்குப்பதிவு சுணக்கமாகவே நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 12.55 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலின் மொத்த வாக்குப்பதிவு 75 சதவீதத்தைக்கூட எட்டாத நிலைதான் நீடிக்கிறது.


75 சதவீதம் கூட இல்லை


குறிப்பாக 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 73.02 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்த 2014 மக்களவைத் தேர்தலில், வாக்குப் பதிவு விகிதம் சற்றே அதிகரித்து 73.74 ஆக இருந்தது. எனினும் 2019 மக்களவைத் தேர்தலில், வாக்குப்பதிவு விகிதம் குறைந்து 72.47 சதவீதமாகப் பதிவானது. 


மாநகரங்களில் இன்னும் மோசம்


2019 மக்களவைத் தேர்தலில், மாநிலம் முழுவதும் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒவ்வொரு தேர்தலிலும் மாநகரங்களில் மிகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின்றன. சென்னையில் ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. குறிப்பாக சென்னை மாநகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒருமுறை கூட 70 சதவீத வாக்குகள் எட்டப்படவில்லை.


இந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த முறையாவது ஒட்டுமொத்த வாக்குப் பதிவு சதவீதம் கூடுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.