TN Election Boycott : தமிழ்நாடு முழுவதும் 39 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 24.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து பிரபலங்களும் பொது மக்களும் தங்களின் வாக்குகலைச் செலுத்தி வருகின்றனர்.
எனினும் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக மக்கள் ஒரு வாக்கைக்கூடச் செலுத்தவில்லை. எங்கெங்கு மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்? என்ன காரணம்? பார்க்கலாம்.
தருமபுரி மாவட்டம் ஜோதிஹள்ளி கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அங்குள்ள மக்களுக்கு மொத்தம் 1,436 வாக்குகள் உள்ள நிலையில், ரயில்வே தரைப்பாலம் அமைக்காததைக் கண்டித்து, வாக்களிப்பை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு வாக்கு கூட பதிவாகாத மூன்று கிராமங்கள்; 4 கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு
கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 3 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஏரிபாளையம் கிராமத்தில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருத்தகிரிக் குப்பம், கட்சி பெருமாத்தம் ஆகிய கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
நெய்வேலி என்எல்சி நிறுவனம், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மும்முடிசோழகன் கிராமத்தில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக, ஏகனாம்புரம் கிராமத்தில் இதுவரை 9 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
என்ன காரணம்?
தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.
ஏகனாம்புரம் கிராமத்தில் 9 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 வாக்குகளையும் அரசு அலுவலர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர் . நாகப்பட்டு கிராமத்தில் இதுவரை ஒரு வாக்குக் கூடப் பதிவாகவில்லை
மயிலாடுதுறையிலும் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்...!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கார்குடி மாதாகோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் உள்ளனர். இந்த நிலையில், அங்கு குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் கூறி தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என்று தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
திருவண்ணாமலையிலும் தேர்தல் புறக்கணிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த 750 வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மையம் நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பக்கத்து ஊராட்சியில் அமைக்கப்பட்டது. இதனால் கிழக்குமேடு கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். இதனால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.