காருடையாம்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தராததால் 100 பொதுமக்கள் வாக்கு செலுத்தாமல் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கரூர் பாராளுமன்ற தொகுதியானது வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணாயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும். இதில் 6 லட்சத்து 93 ஆயிரத்து 730 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 35 ஆயிரத்து 970 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 90 பேர் என மொத்தம் 14 லட்சத்து 29 ஆயிரத்து 790 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் காலை 7.00 மணிக்கு தொடங்கி வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சி காருடையாம்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக மயானம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு நிறைவேற்றி தராததால் இதனை கண்டித்து பாரளுமன்றம் தேர்தலை புறக்கணிப்பு செய்து அப்பகுதியில் மயானம் அமைத்து தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவானது காலை 7.00 மணிக்கு தொடங்கி, மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்த நிலையில் நிலையில் வாக்களிக்க சுமார் 100 பொதுமக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். காருடையாம்பாளையத்தில் 1021 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 819 ஓட்டுகள் மட்டும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசின் சார்பில் மலை கிராமங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொது மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாததால் பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.