திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட193ஆம் வாக்குச் சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் மற்ற தொகுதிகளில் நடைபெறுவது போல, காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட193ஆம் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.

வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்த நபர்

காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாக்குச்சாவடி முகவர் திடீரென தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்தார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப் பதிவு தடைப்பட்டது.

உடைக்கப்பட்ட இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவு

இதைத் தொடர்ந்து அப்பக்குதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரித்து, வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்த நபரைக் கைது செய்தனர். உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தன.

தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தின் விவிபாட் சின்னத்தை பத்திரப்படுத்திவிட்டு, பழைய வாக்குப் பதிவு இயந்திரத்தை தனியே எடுத்து வைத்தனர். தொடர்ந்து புதிய வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துவந்து வைத்தனர். பின்பு காலை 10.20 மணி வாக்கில் வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது. 

 

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவின் வாக்குச் சாவடி முகவர் என்று கூறப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலராக உள்ள மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது ஒரே கட்சியைச் சேர்ந்த நபர்களே இரண்டு, மூன்று பேர் முகவராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.