கொங்கு மண்டலம் என்று கூறப்படுகின்ற மேற்கு தமிழ்நாட்டில், முதன்மையான மாவட்டமான கோவையில் திமுகவுக்கு படுதோல்வி என்று சில நாள்களாகக் கூறப்பட்டுவருகிறது. இதையொட்டி சமூக ஊடகங்களில் பெரிய மல்லுக்கட்டே நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் அந்தப் பஞ்சாயத்து தீரவில்லை.


இந்தத் தேர்தல் முடிவுகள் உண்மையில் திமுகக்கு எதிரானதுதானா, மாவட்டம் முழுவதும் அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டதா என கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம்.. அவரவர் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எதிர்த்தரப்பை காலிசெய்ய வாதங்களை வைக்கிறார்கள்.


பதிவான வாக்குகளின் விவரங்களைப் பார்த்தால் எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது.     




 


* கோவை மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளில், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் ஓர் இடத்தில் பா.ஜ.க.வும் வெற்றிபெற்றுள்ளன.


* வால்பாறை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் தி.மு.க. அணியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தது.  


 


* கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் ஆயிரம் முதல் 4 ஆயிரம்வரைதான் வாக்கு வித்தியாசம். இந்தத் தொகுதிகளில் கமலின் மக்கள் நீதி மையமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. அணிக்கு எதிரான வாக்குகளைக் கைப்பற்றியதுதான், ஒரே காரணமாக இருக்கிறது. தோல்விக்குக் காரணமாக அமைந்த வாக்கு வித்தியாசத்தைவிட, இந்த இரு கட்சிகளின் வாக்குகளும் 20 மடங்குவரை அதிகமாக உள்ளன.


கிணத்துக்கடவு - வாக்கு வித்தியாசம் 1,095


அதிமுக-1,01,537, திமுக-1,00,442, மநீம-13,939, நாதக-11,280


பொள்ளாச்சி- வாக்கு வித்தியாசம் 1725


அதிமுக-80,567, திமுக-78,842, மநீம-7589, நாதக-6,402


மேட்டுப்பாளையம்- வாக்கு வித்தியாசம் 2,456


அதிமுக- 1,05,231, திமுக - 1,02,775, நாதக- 10,954, அமமுக-1864


கோவை வடக்கு- வாக்கு வித்தியாசம் 4,001


அதிமுக- 81,454, திமுக-77,453, மநீம--26503, நாதக-11,433




 


* கவுண்டம்பாளையம் தொகுதியைப் பொறுத்தவரை, தோல்விக்கான வாக்குவித்தியாசம் 10, 424. மநீமவும் நாதகவும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இதைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். 


கவுண்டம்பாளையம் - வாக்கு வித்தியாசம் 10,424


அதிமுக- 1,34981, திமுக-1,24,557, மநீம-23,427, நாதக-17,823


 


கமல் கட்சி துணைத்தலைவர்


* சிங்காநல்லூர் தொகுதியில் மாவட்டத்தின் ஒரே திமுக சட்டமன்ற உறுப்பினரான கார்த்திக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், 36, 855 வாக்குகள் அதாவது கார்த்திக் பெற்ற வாக்கில் பாதியை வாங்கியிருக்கிறார். நாதக வேட்பாளர் 8,366 வாக்குகளையும் சேர்த்தால் கணக்கு எங்கோ போய்விடும். அவ்வளவும் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.


சிங்காநல்லூர்- வாக்கு வித்தியாசம் 10,854


அதிமுக-81244, திமுக-70390, மநீம-36855, நாதக-8,366


 




உண்மையான வெற்றி


* தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர், அமைச்சராக இருந்த வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மூன்று மாவட்டங்களுக்கும் அவரே அதிமுகவின் சார்பில் தேர்தலுக்கு எல்லாவற்றையும் ’கவனித்துக்கொண்டார்’. தன்னுடைய தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு சொல்லும்படியான குறை இல்லாமல் பார்த்துக்கொண்டார்.  


இங்கு மநீம, நாதக, அமமுக மூன்று கட்சிகளும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையைச் சேர்த்தால்கூட, வேலுமணிக்கும் திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறது. அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதி என்றால் நிச்சயம் இதைச் சொல்லமுடியும்.  


தொண்டாமுத்தூர் - வாக்கு வித்தியாசம் 41,630


அதிமுக-1,24,225, திமுக-82,595, மநீம-11,606, நாதக-8,042


 


வானதி சீனிவாசன், கமல்


* கோவை தெற்கு தொகுதியின் வெற்றியாளர், பாஜகவின் வானதி சீனிவாசன். மநீம தலைவர் கமல்தான் அவருக்கு இங்கு முதன்மைப் போட்டியாளர். 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல் தோற்றுப்போனார். தி.மு.க. அணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் 42ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் வாங்கினார். நாதக, அமமுக வாக்குகளையும் சேர்த்தால் இந்தத் தொகுதியில் அரசுக்கு எதிரான வாக்குகள் 98 ஆயிரத்துக்கும் மேல்!


கோவை தெற்கு - வாக்கு வித்தியாசம் 1,728


பாஜக-53,209, கமல்-51,481, காங்-42,383, நாதக-4,300


 


இந்திய கம்யூனிஸ்ட்


* வால்பாறை தொகுதியைப் பொறுத்தவரை கடந்த காலங்களிலும் இங்கு திமுக அணியில் கூட்டணிக் கட்சிகளே இங்கு போட்டியிட்டன. இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் போட்டியிட்டார். ஆண்ட கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட நாதக, மநீம, தேமுதிக ஆகிய கட்சிகளின் மொத்த வாக்குகளையும் கணக்கிட்டால், அதிமுகவைவிட சில பத்து வாக்குகள் கூடுதலாக உள்ளன.  


வால்பாறை - வாக்கு வித்தியாசம் 12,230


அதிமுக -71,672, இ.கம்யூ- 59,442, நாதக- 7,632, மநீம- 3,314, தேமுதிக- 1,335.


 


கோவை மாவட்டத்தின் தேர்தல் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஏபிபி நாடு வெளியிட்ட ஓர் அலசல் செய்தியை, நேயர்கள் படித்திருக்கலாம். அதனுடைய தொடர்ச்சியாக தான் இந்த தரவுகளும் இடம் பெறுகின்றன.