மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. 


தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளிலேயே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 


இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என தமிழ்நாடு தலமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தல் நாளிலேயே, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. 


இன்றே கடைசி நாள்:


மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாளாகும். எனவே 18 வயது நிறைவடைந்தவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்று கடைசி நாள், எனவே இப்போது கூட விண்ணப்பிக்கலாம். வயதானவர்களுக்கு ஏதுவாக வீட்டிலிருந்தே வாக்களிக்க, 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அங்கு சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், ஒரு குறிப்பிட்ட நபர் ரூ. 50 ஆயிரம் பணத்தை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூட்டாது.  அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவி ஏற்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்தார். 


தமிழ்நாடு - மக்களவை தேர்தல் விவரம்: 


தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி பேரும், பெண்கள் 3.15 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேரும் உள்ளனர். அதில், 22-29 வயதுடைய வாக்காளர்கள் 1.06 கோடி பேர் உள்ளனர்.


தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் முதல் முறை வாக்காளர்கள் 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள்: 


தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி நகர பகுதிகளில் 27, 306, கிராமப் பகுதிகளில் 40,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது.