துபாயில் நடைபெற்ற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து இந்திய திரையுலகின் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் போட்டி தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணி, நடிகர் சோனு சூட் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
சென்னை அணியில் ஆர்யா (கேப்டன்), ஆதவ், அஜய் ரோகன், பரத் நிவாஸ், ரமணா, தசரதன், ஜீவா, கலையரசன், விக்ராந்த், பிரித்வி, சாந்தனு ஆகியோர் விளையாடினர். அதன்படி களம் கண்ட சென்னை அணி முதல் இன்னிங்ஸில் (10 ஓவர்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை குவித்தது. அந்த அணியில் விக்ராந்த் மற்றும் அதிகப்பட்சமாக விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 52 ரன்களை விளாசினார். சாந்தனு 13 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பந்துவீச்சில் பரத், தசரதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விக்ராந்த் மற்றும் ஆதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் பேட் செய்த சென்னை அணியில் விக்ராந்த் 41 ரன்களும், அஜய் 30 ரன்களும், ரமணா 12 ரன்களும் விளாச 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 12 ரன்களையும் சேர்த்து பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 122 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அந்த அணி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் நடிகர்கள் ஜீவா, பரத், தசரதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை ரைனோஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.