பீகார் தேர்தலில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தோல்வி என்றால் சாதாரண தோல்வி அல்ல. ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது தான் பெரிய விஷயமே. ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரே தேர்தலில் சறுக்கி இருப்பதுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. மேலும், அவர் அரசியலில் இருந்து விலகிவிடுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Continues below advertisement

வியூக வகுப்பாளராக பிரகாசித்த பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுப்பதில் கிங் என்று அழைக்கப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். இவர் வகுத்துக் கொடுத்த வியூகங்களின் மூலம், பல கட்சிகள் தேர்தலில் வெற்றிகளை தங்களுடையதாக்கி, ஆட்சிக் கட்டிலை பிடித்துள்ளனர்.

2012-ம் ஆண்டு, குஜராத் சட்டமன்ற தேர்தலில், நரேந்திர மோடி வெற்றி பெற்று முதலமைச்சராவதற்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் தான். 2015-ல், ஐக்கிய ஜனதா தளத்திற்காக பணிபுரிந்த அவர், நிதிஷ் குமார் வெற்றிபெற உதவினார். அதேபோல், 2017-ல், காங்கிரசுடன் இணைந்து பணியாற்சி, பஞ்சாப் தேர்தலில் கேப்டன் அமரிந்தர் சிங்கை வெற்றி பெற வைத்தார். ஆனால், அதே வருடத்தில் உத்தர பிரதேச தேர்தலில் தான் அவரது வியூகம் பலிக்காமல் போனது.

Continues below advertisement

பின்னர், 2019-ல், ஒய்எஸ்ஆர் கட்சிக்கு பிரமாதமான தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற உதவினார். 2020-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்த அவர், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி வாகை சூட உதவினார்.

கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரசிற்காக பணிபுரிந்து, மம்தா பேனர்ஜியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதே ஆண்டில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக, திமுகவிடம் பெரிய தொகையை சம்பளமாக பெற்று, மு.க. ஸ்டாலினை ஆடசிக் கட்டிலில் அமர வைத்தார்.

இப்படி, பல கட்சிகளை பவருக்கு கொண்டுவந்து, கிங் மேக்கராக வலம் வந்த பிரசாந்த் கிஷோர், தன்னுடைய சொந்த வியூகத்தில் கோட்டை விட்டுள்ளது, பீகார் தேர்தலில் பகிரங்கமாக தெரிகிறது.

பீகார் தேர்தலில் பூஜ்ஜியமான பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், ஒரு கட்டத்தில் தேர்தல் வியூகம் வகுப்பதிலிருந்து விலகி, சமூக ஆர்வலராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தை, 2022-ம் ஆண்டு அரசியல் கட்சியாக அவர் மாற்றினார்.

அதைத் தொடர்ந்து, தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்காக வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர், பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும், 4,000 கிலோ மீட்டர் அளவிற்கு பாத யாத்திரையை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவைக் கண்டு உற்சாகமடைந்த அவர், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவு எடுத்தார்.

அதைத் தொடர்ந்து, தற்போதைய தேர்தலில், 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி தனித்து களம் கண்டது. ஒவ்வொரு தொகுதி வேட்பாளரையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து நிறுத்தினார் பிரசாந்த் கிஷோர். மேலும், இந்த தேர்தலில் தனது கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், அதில் ஒன்று குறைந்தாலும் அதை தனது தோல்வியாகவே கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலில் இருந்து விலகுவாரா பிரசாந்த் கிஷோர்.?

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணப்புகள் அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்றும், அவ்வாறு நடந்தால் தான் அரசியலை விட்டே விலகுவதாகவும் சவால் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்நிலையில் தான், பீகார் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்புகளை உண்மையாக்கி, பாஜக கூட்டணிக்கு பெரும் வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல், அவர் சொன்னதற்கு மாறாக, ஐக்கிய ஜனதா தளம் தனித்தே 80 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்ற சொன்ன பிரசாந்த் கிஷோருக்கு பூஜ்ஜியமே பதிலாக கிடைத்துள்ளது. இந்நிலையில், தான் சவால் விட்டது போல், அரசியலில் இருந்து விலகிவிடுவாரா என்பதே தற்போது மக்களின் கேள்வியாக உள்ளது.?