பாஜக கூட்டணியில் நிதிஷ்குமாரரும் சிராக் பஸ்வானும் மீண்டும் அசுரபலத்தை காட்டி மிரள வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தல்தான் நிதிஷுக்கு கடைசி தேர்தல் என்ற விமர்சனம் இருந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தை தனிப்பெரும் கட்சியாக நிரூபித்து காட்டியுள்ளார் நிதிஷ்.
பீகார் தேர்தல் 2025:
இரண்டு கட்டங்களாக நடந்த பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் 12 மணி நிலவரப்படி, பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 189 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 51 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னில்லை பெறாமல் மண்ணை கவ்வியுள்ளது.
பீகார் தேர்தல் முடிவு முன்னணி நிலவரம்:
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களிலும், ஐக்கிய ஜனதாளம் 101 இடங்களிலிம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 28 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி 6 இடங்களிலும் போட்டியிட்டது. அதேபோல எண்டிஏ ஆதரவு சுயேச்சை 1 இடத்திலும் போட்டியிட்டது.
பாஜக போட்டியிட்ட 101 இடங்களில் 75 இடங்களில் முன்னிலை, ஜேடியூ- போட்டியிட்ட 101 இடங்களில் 87 இடங்களில் முன்னிலை, சிராக் பஸ்வான் போட்டியிட்ட 28 தொகுதியில் 22 இடங்களில் முன்னிலை, அதேபோல ஆர்எஸ்எம் போட்டியிட்ட 6 தொகுதியில் 3 இடங்களில் முன்னிலை, ஹெச்ஏஎம் போட்டியிட்ட 6 தொகுதியில் 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
காலரை தூக்கும் நிதிஷ், சிராக்:
இதில் முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கட்சிகள் செய்த சம்பவம் தான் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பீகார் பக்கம் திருப்பியுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் எதிர்காலத்தில் பலவீனம் அடையும் என்ற விமர்சனத்தையும் பீகார் தேர்தல் தவிடுபொடியாக்கி உள்ளது.
விஸ்வரூபம் எடுத்த நிதிஷ்குமார்:
இந்த தேர்தலில் நிதிஷ்குமாருக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டதாக பாஜகவினர் மத்தியில் பேசப்பட்டது. அதேபோல நிதிஷ்குமார் வயது மூப்பு காரணமாக அவரால் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாது என்று கூட்டணி கட்சிகளே குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக சிறந்த முலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கருத்து கணிப்பில் தேஜெஸ்வி யாதவ் முதலிடத்திலும், பிரசாந்த் கிஷோர் இரண்டாம் இடமும் பிடித்தனர். இதில் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது. அப்போது இந்த சட்டப்பேரவை தேர்தல் 2025 தான் நிதிஷ்குமாருக்கு கடைசி தேர்தல் என பேசப்பட்டது.ஆனால் தேர்தல் முடிவில் தனிப்பெறும் கட்சியாக மீண்டும் உருவெடுத்து உள்ளது ஐக்கிய ஜனதா தளம். ஆதாவது 2005-2010 கால கட்டத்தை போல் மீண்டும் தனிப்பெறும் கட்சியாக ஜேடியூ மாறியுள்ளது. இதனால் பீகாரில் 10 முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க போகிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
சிராக் பஸ்வான் எழுச்சு:
லோக் ஜனசக்தி கட்சி பஸ்வான் மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்டது. மகன் சிராக் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகவும், தம்பி பசுபதி குமார் தலைமையில் ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகவும் உருவானது. கட்சி பிளவுக்கு நிதிஷ்குமார்தான் காரணம் என சிராக் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.இருந்தாலும் தொடர்ந்து பாஜக கூட்டணில் பயணித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலி 5 தொகுதியில் போட்டியிட்டு 5-லும் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார் சிராக்.
அதேபோல தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடக்கத்தில் கடுமையான இழுபறி நீடித்தது. இதற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது சிராக் பஸ்வான் தான். தங்கள் கட்சிக்கு குறைந்தது 28 தொகுதிகள் வேண்டும் என்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை வரை உறுதியாக நின்று வாங்கிகாட்டினார்.
தலித் மக்கள் மத்தியில் தனது தந்தை ராம் விலாஸ் பஸ்வான் போல் செல்வாக்கும் மிக்க தலைவராக உருவெடுத்துள்ளார் சிராக் பஸ்வான். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லோக் ஜனசக்தி போட்டிட்ட 28 தொகுதியில் 22 இடங்கள் முன்னிலை பெற்று வெற்று முகத்தில் உள்ளது.
இப்படி நிதிஷ்குமார், சிராக் இமாலய வெற்றி பீகார் தேர்தல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் இந்த இரண்டு கட்சியும் இழந்த தனது பழைய செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளதால் பாஜக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் எதிர்காலத்தில் பலவீனம் படும் என்ற கருத்து உண்மை இல்லை என்று பாஜகவினரே கருத்து தெரிவிக்கின்றனர்.