ABP Cvoter Exit Poll 2024: இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 400 இடங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்துத்தான் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது பாஜக. ''அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிடுவார்கள். நாட்டில் தேர்தலே கிடைக்காது'' என்றெல்லாம் பாஜக மீது எதிர்க்கட்சிக் கூட்டணிகள் விமர்சனத்தைக் கிளப்பின.


நாட்கள் செல்லச்செல்ல பாஜகவால் 400 தொகுதிகளை எல்லாம் பெற முடியாது என்று கருத்துக்கணிப்புகள் சொல்ல ஆரம்பித்தன. இந்தக் காரணங்களால், 400 தொகுதிகள் என்ற பிரச்சாரத்தில் இருந்து பாஜக பின்வாங்கியது.


கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு


இந்த நிலையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் இன்று முடிந்தது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. ABP – C Voter கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:


இதன்படி தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களைத் தவிர, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களிலும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே என்டிஏ கூட்டணி தொகுதிகளை வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 37 முதல் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 0 முதல் 1 இடத்தையும் என்டிஏ கூட்டணி 0 முதல் 1 இடத்தையும் பெறும் எனவும் கருத்துக் கணிப்பில் மக்கள் தெரிவித்து உள்ளன. 


வாக்கு சதவீதம் என்ன?


இந்தியா கூட்டணி 46.3 சதவீத வாக்குகளையும் என்டிஏ கூட்டணி 18.9 சதவீத வாக்குகளையும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக 21% இடங்களையும் பிற கட்சிகள் 13.8 சதவீத இடங்களையும் பெறும் என்று ABP – C Voter கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 17 முதல் 19 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல என்டிஏ கூட்டணி 1 முதல் 3 இடங்களைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இடதுசாரி முன்னணி 33.3% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணி, 41.9 சதவீத வாக்குகளையும் என்டிஏ கூட்டணி 22.6 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய ABP – C Voter கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 7 முதல் 9 இடங்களையும் என்டிஏ கூட்டணியும் 7 முதல் 9 தொகுதிகளையும் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1 தொகுதியைப் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  


ஆந்திராவில் அபாரம்


அதேபோல ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் இந்தியா கூட்டணி எந்த இடத்தையுமே வெல்லாது என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணி 21 முதல் 25 இடங்களையும் பிற கட்சிகள் 0 முதல் 4 இடங்களையும் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு கூறி உள்ளது.


அதேபோல கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 3 முதல் 5 இடங்களை வெல்லலாம் என்று ABP – C Voter கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் என்டிஏ கூட்டணி 23 முதல் 25 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?


தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 1 இடத்தைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை 2 இடங்கள் வரை வெல்லலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் கடந்த முறை எந்த இடத்தையும் வெல்லாத என்டிஏ கூட்டணி, இம்முறை 1 முதல் 3 தொகுதிகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இம்முறை 7 முதல் 9 தொகுதிகளைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டு கடந்த முறை 1 இடத்தைக்கூட வெல்ல முடியாத, பாஜக இம்முறை கூட்டணியில் 21 முதல் 25 தொகுதிகளை வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகாவைப் பொறுத்தவரை, நிலையில் பெரிதாக மாற்றமில்லை. கடந்த முறை 25 தொகுதிகளை என்டிஏ கூட்டணி பெற்ற நிலையில், இந்த தடவையும் 25 தொகுதிகள் வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றே ABP – C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.