தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு வேட்புமனு பரிசீலனை கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. 7 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. இதில் பலர் தங்களது வேட்பு மனுக்களை இறுதி நேரத்தில் வாபஸ் பெற்று கொண்ட சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்றது. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 




 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் 14 ஆவது வார்டில் அ.தி.மு.க வேட்பாளராக களம் இறங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி பழனி (56) வேலை முடிந்தது மீதம் உள்ள நேரங்களில் வீடு, வீடாக சென்று தனி ஆளாக வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமை தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பழனி, வேலையை விட மனமில்லாத காரணத்தால் மூட்டை தூக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு காலை, மாலையில் தனி ஆளாக சென்று  பரப்புரை மேற்கொள்வதாக கூறுகிறார்.

 





”அ.தி.மு.க நிர்வாகிகள் தனியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தனி ஆளாக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறேன். மக்கள் காலை, மாலையில் மட்டும்தான் வீட்டில் இருப்பர். இதனால், அந்த சமயங்களில் வாக்குச் சேகரிப்பேன். மற்ற நேரங்களில் வேலைக்கு சென்று விடுவேன். ஏற்கெனவே 2 முறை அ.தி.மு.கவில் நின்றேன். ஒருமுறை மக்கள் வேண்டுகோளை ஏற்று வாபஸ் பெற்றேன். மற்றொரு முறை 18 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை வெற்றிபெறுவேன். அ.தி.மு.கவின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் வெற்றிபெறுவது சவலாக இருக்காது என அ.தி.மு.க வேட்பாளர் பழனி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, காளையார்கோயில் உள்ளிட்ட பகுதிகள் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ளது.