திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  கலந்துகொண்டு ஆதரவு திரட்டுகிறார். இந்த நிலையில் நெல்லை என் ஜி ஓ காலனியில் உள்ள ராபர்ட் ப்ருஸின் இல்லத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மேலிட பொறுப்பாளர் ஸ்ரீ வல்லபிரசாத் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செல்வப் பெருந்தகை கூறியதாவது, முருகப்பெருமான் எப்படி பாசிச சக்திகளை சூரசம்ஹாரம் செய்தாரோ அதே போன்று இந்த தேசத்து மக்களுக்கு எதிராக செயல்படும் பாசிசவாதிகளை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறோம். இன்று எங்கள் தலைவர் ராகுல்காந்தி சரியாக 3.50 மணிக்கு நெல்லையில் ஹெலிஹாப்டர் இறங்கும் தளத்திற்கு வருகிறார். 4 மணிக்கு கூட்டம் ஆரம்பித்து 4.50 க்கு முடித்துவிட்டு விமானம் மூலம் கோவை செல்கிறோம். அங்கு முதல்வருடன் பரப்புரை செய்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது இந்தியா கூட்டணி.  இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது. அதிலும் தமிழ்நாடு முன்னணி களக்கர்த்தாவாக இருக்கப்போகிறது.  முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி மாம்பழத்தை ஒப்பிட்டு  ஆட்சியாளர்களின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளார்.  மோடி ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்களே தற்போது அவருக்கு எதிராக பேசிய வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற  நம்பிக்கை எங்களுக்கு இல்லை, காரணம் 4 கோடி ரூபாய் பிடித்து 1 வாரம் ஆகிறது. இதுவரை தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பணத்தையே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று உங்களிடம் ஏற்கனவே சொன்னேன். அமலாக்கத்துறையும், சிபிஐயும், வருமானவரித்துறையும் உறங்கி கொண்டிருக்கிறது. கும்பகர்ணனாக இருக்கிறார்கள். எப்போது அவர்கள் தூக்கம் தெளிந்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவில்லை என்றார்.


ராகுல்காந்தியின் உரையை பீட்டர் அல்போன்ஸ் தான் மொழியாக்கம் செய்ய இருக்கிறார். எங்களது வேட்பாளர் இறக்குமதி வேட்பாளர் என கூறுவது தவறானது. கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் வந்து நடிக்கிறார், அரசியல் செய்கிறார் ரஜினிகாந்த். அவரை  நம்புகிறீர்கள்.  ஆனால் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவரை இப்படி கூறுவது சரியா? என்றார். காங்கிரஸ் கட்சி சமுத்திரம் போன்றது. அதில் ஒரு சில உட்கட்சி பூசல்கள் அலை போல இருக்கத்தான் செய்யும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் சரியாக செயல்படவில்லை என மொட்டை கடிதாசு அனுப்பியுள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எங்களுக்குள் எவ்வித பிரிவினையும் இல்லை. திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டது. எதிரிகளே எங்களுக்கு இங்கு இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும்,  சர்வாதிகாரத்திற்கும் ஆன தேர்தல். பாரதிய ஜனதா கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினர் 2014 ஆம் ஆண்டு கட்சத் தீவு குறித்து பேசியதற்கும், தற்போது பேசுவதற்கும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளது. தேர்தலுக்காக அவர்கள் பேசி வருகிறார்கள். தலைவர்கள் பேசும்போதும் குற்றம்சாட்டும் போதும் அதில் நேர்மை வேண்டும். அந்த நேர்மை பாஜகவிடம் இல்லை  என்று தெரிவித்தார்.