“விஜய் என்றாலே எல்லாமே ரத்து தான்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இன்னும் இரண்டொரு நாட்களில் ராகுல் காந்தியும், முதல்வரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் நிகழ்ச்சி நிரலை அறிவிப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். விஜய் என்றாலே எல்லாமே ரத்து தான் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மீஞ்சூர் பஜாரில் பிரச்சாரம் செய்தார்.
மத்திய அரசுக்கு அடிபணியாதவர் முதல்வர்
அப்போது பேசிய அவர், முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், கற்றறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மாற்றியுள்ளார் எனவும், காலை உணவு திட்டம் மேலை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். பெஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பெயரை முதல்வர் எடுத்துள்ளதாகவும், ஒரு போதும் மத்திய அரசுக்கு அடிபணியாதவர் முதல்வர் எனவும், தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என முதல்வர் கூறியுள்ளதாகவும், எடப்பாடி அடிமை சாசனம் எழுதி கொடுத்தி விட்டார் எனவும், ஜெயலலிதா இருந்தவரை நீட், உதய் மின் திட்டம் வரவில்லை எனவும், தமிழ்நாட்டு உரிமைகளை விட்டு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் அவர் விமர்சித்தார்.
ரூ.2800 கோடியை கொடுக்காமல் போனாலும், 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளாதவர் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் கிளை கழகம் அதிமுக எனவும், அதிமுகவை எடப்பாடி அடகு வைத்து விட்டார் எனவும், சிலிண்டர் விலையை கண்டித்து நாடே போராடிய போதும், எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும், தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் வழக்குகளுக்கு பயந்து கூட்டணியில் உள்ளதாகவும், ஆயிரம் மோடிகள் வந்தாலும் எதிர்த்து நிற்பவர்கள் தங்களது கூட்டணியில் உள்ளவர்கள் எனவும் அவர் கூறினார்.
விஜய் என்றாலே எல்லாமே ரத்துதான்
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, இன்னும் இரண்டொரு நாட்களில் ராகுல் காந்தியும், முதல்வரும் தமிழகத்தில் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளோம், ஓரிரு நாட்களில் நிகழ்ச்சி நிரலை அறிவிப்போம் எனவும், காங்கிரஸ் 28 தொகுதிகளில் 100% வெற்றி பெறும் எனவும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 210 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும், எதிர்ப்பு அலை ஒருபுறமும், ஆதரவு அலை ஒருபுறமும் வீசி கொண்டிருப்பதாகவும், மோடிக்கும், பழனிசாமிக்கும் எதிராக எதிர்ப்பு அலையும், ஸ்டாலினுக்கும், ராகுலுக்கும் ஆதரவான அலையும் வீசுவதாகவும், எதிர்ப்பு அலையை தாண்டி ஆதரவு அலை தமிழ்நாடு முழுவதும் 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனவும், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் 100% வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார். விஜயின் அடுத்தடுத்த பரப்புரை ரத்து குறித்த கேள்விக்கு, எல்லாமே ரத்து தான் எனவும் தெரிவித்தார்.
